உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடற்கரை ரயில் நிலையம் அருகில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து

கடற்கரை ரயில் நிலையம் அருகில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து

சென்னை, கடற்கரை ரயில் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் நேற்று திடீரென தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் ஆவடி, அரக்கோணம் தடத்தில் தினமும் 300க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து ஆவடியை நோக்கி நேற்று காலை 11:00 மணி அளவில் மின்சார ரயில் புறப்பட்டது. இதில், 200க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த ரயில் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், திடீரென தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.ரயில் இன்ஜினில் இருந்து ஒன்பதாவது பெட்டியின் நான்கு சக்கரங்கள் ரயில் பாதையை விட்டு, வெளியேறியது. இதையடுத்து, மின்சார ரயிலை ஓட்டுனர், நிறுத்தினார். உடனடியாக, ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். இந்த சம்பவத்தால் ராயபுரம் - சென்னை கடற்கரை நிறுத்தம் இடையே ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின் ரயிலில் இருந்த பயணியர் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே தொழில்நுட்ப அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, தடம்புரண்ட ரயில் பெட்டியை மீட்டு, அங்குள்ள பணிமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, சேதமடைந்த ரயில் பாதை சீரமைப்பு பணி பகல் 1:30 மணிக்கு முடிந்தது. பின் இந்த தடத்தில் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.பயணியர் கூறியதாவது: கடற்கரையில் இருந்து புறப்பட்ட அடுத்த சில நிமிடத்தில் திடீரென ரயில் பக்க வாட்டில் இருக்கும் சுவரை லேசாக உரசியப்படியே மெதுவாக சென்றது. இதனால், நாங்கள் அச்சப்பட்டோம். மெதுவாக ரயில் சென்றதால், பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'ரயில் தடம்புரண்ட உடனே, அந்த குறிப்பிட்ட பாதையை ஒதுக்கி விட்டு, மற்ற பாதை வழியாக ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால், ரயில் சேவையில் பாதிப்பு இல்லை. இந்த விபத்துக்கான காரணம் குறித்து, ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ