ஐ.சி.எப்., தொழிற்சாலையில் எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு
சென்னை:குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் பரமேஷ், 39; எலக்ட்ரீஷியன். இவர், ஐ.சி.எப்., ரயில் பெட்டி தொழிற்சாலையில், கடந்த 10 ஆண்டுகளாக, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்தார்.ரயில் பெட்டிகள் இணைத்த பின், தண்டவாள பாதையில் நிறுத்தப்படும், 'டெஸ்டிங் கோச் மூவ்மென்ட்' மையத்தில், பரமேஷ்பணியில் இருந்தார்.அந்த ரயிலின் கூரையில் ஏறி, மின் கடத்திகளை வழக்கம் போல் பரிசோதித்தார். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில், உடல் கருகி மேலிருந்து துாக்கி வீசப்பட்டார்.இதில், சம்பவ இடத்திலேயே பரமேஷ் உயிரிழந்தார். ஐ.சி.எப்., போலீசார் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.ஐ.சி.எப்., தொழிற்சாலை ஊழியர்கள் கூறுகையில், 'தயாரான ரயில் பெட்டிகளை இணைத்தப் பின், இன்ஜின்களுடன் மின்சாரம் வினியோகிக்கப்படும். அப்போது, 20 கோச்களில் நான்கில் மட்டும், 25,000 'கிலோ வாட்' மின்சாரம் நேரடியாக இருக்கும். அதை பரிசோதித்துக்கும்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி இருக்கலாம்' என்றனர்.