| ADDED : ஜன 14, 2024 02:19 AM
ஆவடி, ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் போலீஸ் கன்வென்சன் சென்டரில், ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மனைவியுடன் கலந்து கொண்டார். அவரை மேளம், தாளம் முழங்க அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.விழாவில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உட்பட அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து குடும்பத்தினருடன் பங்கேற்றனர். இதையடுத்து, சங்கர் ஜிவால் மனைவியுடன் பொங்கலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.விழாவில், கயிறு இழுத்தல், உரி அடித்தல், வாலிபால் விளையாடுவது, கோலம் போடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. அதேபோல், ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பம், பறை இசை, குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சங்கர் ஜிவால் பரிசுகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் டி.ஜி.பி. சங்கர் ஜீவன் பேசியதாவது..கடந்த ஓராண்டாக ஆவடி கமிஷனரகம் சிறப்பாக செயல்படுகிறது. பணியின் காரணமாக போலீசாருக்கு மன அழுத்தம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. அதற்காக சென்னை வேளச்சேரி தனியார் கல்லூரியில், மகிழ்ச்சி முகாம் என்ற பெயரில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 800 கோடி ரூபாய் மதிப்பில் மதுரை, கோவை, திருச்சி, சென்னை பெரும்பாக்கம் பகுதிகளில், போலீசாருக்கு 400 வீடுகள் கட்ட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.