உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவடியில் வெள்ள பாதிப்பு தடுப்பு நடவடிக்கை கூட்டத்தொடரில் முறையிட்டும் பயனில்லை

ஆவடியில் வெள்ள பாதிப்பு தடுப்பு நடவடிக்கை கூட்டத்தொடரில் முறையிட்டும் பயனில்லை

ஆவடி, ஆவடியில், பருவமழை வெள்ள பாதிப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து, கடந்த ஆறு கூட்டத்தொடர்களில் முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என, கவுன்சிலர் குற்றஞ்சாட்டி உள்ளார்.ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் ஜி.உதயகுமார் தலைமையில், நேற்று காலை நடந்தது. இதில், மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.ஜான், 10வது வார்டு மா.கம்யூ., கவுன்சிலர்: கடந்த ஆறு கூட்டத்தொடர்களாக மழைக்காலம் வருவதற்கு முன், என் வார்ட்டில் உள்ள கால்வாய்களை துார்வாரும் பணிகளை முடுக்கி விட்டு, நீரோட்டம் தடைபடாதபடி நடவடிக்கை வேண்டும்.கழிவுநீர் தேங்கி உள்ள பகுதிகளில் சுத்தம் செய்து கொசு மருந்து அடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தேனர். ஆனால், எந்த திட்டமும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

வெளிநடப்பு

இவ்வாறு மாமன்ற கூட்டத்தில் குற்றச்சாட்டுகள் அடுக்கிய கவுன்சிலர் ஜான், திடீரென வெளிநடப்பு செய்தார்.ரமேஷ் 37வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: குப்பை கழிவுகளை லாரியில் கொண்டு செல்லும்போது, தார்ப்பாய் கொண்டு மூடுவதில்லை. இதனால் வேகத்தடை மற்றும் குண்டும் குழியுமான சாலையில் செல்லும்போது, சாலையில் கொட்டிச் செல்கின்றனர். மேலும், லாரிகளின் பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேகலா சீனிவாசன், 38வது வார்டு காங்., கவுன்சிலர்: மழைக்காலம் வருவதால், முன்னெச்சரிக்கை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பருத்திப்பட்டு அருகே கிடப்பில் உள்ள கால்வாய் பணியை முடிக்க வேண்டும். தண்ணீர் தேக்கமானால், அதை வெளியேற்ற 'மோட்டார் பம்ப்' தயார் நிலையில் வைக்க ஆவன செய்ய வேண்டும்.சக்திவேல் 8வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: என் வார்டில் உள்ள தாமரை குளத்தை பராமரித்து சீரமைக்க வேண்டும். அந்த மிகப்பெரிய குளத்தை பாதுகாத்து, சுற்றுலாத்தலமாக மாற்றலாம்.பிரகாஷ் முதல் வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்: கால்வாயில் துார்வாரும் பணி நடக்கவில்லை. மழைக்காலம் வந்து விட்டது. கடந்த மூன்றாண்டில், கால்வாயை பார்வையிட்டு பணிகளை செய்ய திட்டமிடுகிறோம். ஆனால், அதன் பின் எந்தப்பணியும் நடப்பதில்லை. சாலையிலேயே தண்ணீர் தேங்கி நிற்கிறது. என் வார்டில் 100 மீட்டர் கால்வாய் கூட புதிதாக கட்டவில்லை.இவ்வாறு கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.கூட்டத்தில், மொத்தம் 80 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை