உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை மாநகராட்சியில் இரு ஊராட்சிகள் இணைப்பு விரிவாக்கம்! ஆவடி மாநகராட்சி எல்லை மூன்று மடங்கு அதிகரிப்பு

சென்னை மாநகராட்சியில் இரு ஊராட்சிகள் இணைப்பு விரிவாக்கம்! ஆவடி மாநகராட்சி எல்லை மூன்று மடங்கு அதிகரிப்பு

சென்னை : சென்னை மாநகராட்சியுடன், திருவள்ளூர் மாவட்டத்தின் அடையாளம்பட்டு, வானகரம் ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஆவடி மாநகராட்சியுடன், பூந்தமல்லி, திருவேற்காடு, திருநின்றவூர் ஆகிய மூன்று நகராட்சிகள், 17 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, மாநகராட்சி எல்லை மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், வேப்பம்பட்டு, நாரவாரிக்குப்பம் பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்கிறது.தமிழகத்தில் கிராம ஊராட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும், 5ம் தேதியுடன் முடிகிறது. ஆனால், இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், ஊரக பகுதிகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைத்தப்பின் தேர்தல் நடத்தப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதற்கான பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.சென்னை மாநகராட்சி, 426 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டுள்ளது. தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அடையாளம்பட்டு, வானகரம் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்பட்டுள்ளது. இதனால், சென்னை மாநகராட்சியின் எல்லை, 442 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டதாக மாறுகிறது.

ஆவடி

கடந்த, 2019ல் உருவாக்கப்பட்ட ஆவடி மாநகராட்சியில், பூந்தமல்லி, திருவேற்காடு, திருநின்றவூர் ஆகிய மூன்று நகராட்சிகள் இணைக்கப்பட்டு உள்ளன. கருணாகரச்சேரி, நடுக்குத்தகை, நெமிலிச்சேரி, மோரை, பாலவீடு, வெள்ளானுார், அயப்பாக்கம், காட்டுப்பாக்கம், கண்ணம்பாளையம், சோராஞ்சேரி, பாணவேடுதோட்டம், சென்னீர்குப்பம், நசரத்பேட்டை, பாரிவாக்கம், வரதராஜபுரம், அகரமேல், மேப்பூர் ஆகிய, 17 ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன.இதன் வாயிலாக, 65 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட ஆவடி மாநகராட்சி, 181.82 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டதாக விரிவாக்கப்படுகிறது. அதாவது, ஏற்கனவே இருந்ததை விட, மூன்று மடங்கு பரப்பளவு கூடுகிறது.

வேப்பம்பட்டு

திருவள்ளூர் மாவட்டத்தில், 25 வேப்பம்பட்டு, 26 வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, நத்தமேடு ஆகிய நான்கு கிராம ஊராட்சிகளை இணைத்து, வேப்பம்பட்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது.பேரூராட்சியாக உள்ள நாரவாரிக்குப்பம் நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. இதில், வடகறை, அழிஞ்சிவாக்கம், கிராண்ட்லைன், புள்ளிலைன், சென்ட்ரம்பாக்கம், தீர்த்தங்கரையம்பட்டு, விலாங்காடுபாக்கம், பொத்துார், பம்மதுகுளம் ஆகிய ஊராட்சிகள் இணைகின்றன.திருவள்ளூர் நகராட்சியுடன், சேலை, காக்களூர், ஈக்காடு, தலக்காஞ்சேரி, திருப்பாச்சூர், திறுவானுார், மேல்நல்லத்துார், வெங்கத்துார், புட்லுார் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படுகிறது.பொன்னேரி நகராட்சியில், தடப்பெரும்பாக்கம், கொடூர் ஆகிய ஊராட்சிகளும்; திருத்தணி நகராட்சியில், கார்த்திகேயபுரம், பட்டாபிராமபுரம் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில், அத்திப்பட்டு, பாடியநல்லுார், கடம்பத்துார் ஆகிய கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.அதன்படி, நகர்புற உள்ளாட்சிகளை சுற்றியுள்ள ஊராட்சிகள் இணைக்கப்படும்போது, நகர்ப்புறங்களுக்கு இணையான வகையில் சாலை, குடிநீர், திட, திரவக்கழிவு மேலாண்மை, கழிப்பறை, பாதாள சாக்கடை கட்டமைப்பு, தெருவிளக்கு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Seenu
ஜன 04, 2025 09:15

மக்களின் பணத்தை சுரண்டும் முயற்சி இது. மக்களின் அடிப்படை வசதி உயராது திருட்டு திராவிட மாடல்.


senthilkumar s
ஜன 03, 2025 21:56

பூந்தமல்லி நகராட்சி கழிவு நீர் கால்வாய் இல்லாத ஒரு ஊர்...... இருபத்தைந்து ஆண்டு கால பிரச்சினை...இதை எல்லாம் சீர் செய்வதை விட்டு...மாநகராட்சி பகுதி ஆக்கி என்ன பிரயோஜனம்.... வரி வசூல் மட்டுமே உயரும்.


Rajan Thangaraj
ஜன 02, 2025 10:42

இதையெல்லாம் வெறும் பேப்பரில் தான் இருக்கும், நடக்கும்போது பசர்களாம்


Vijayasimman Jinadoss
ஜன 02, 2025 06:30

Super


முக்கிய வீடியோ