மூன்று அரசு நிறுவன சுற்றுச்சுவரை இடித்து படேல் சாலையை அகலப்படுத்த எதிர்பார்ப்பு
சென்னை, சென்னையின் மைய பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றாக, சர்தார் படேல் சாலை உள்ளது.இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., அடையாறு பகுதியில் இருந்து, கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் சைதாப்பேட்டையில் இருந்து அடையாறு, ஓ.எம்.ஆர்., கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள், சர்தார் படேல் சாலை வழியாக செல்கின்றன.கவர்னர் மாளிகை நுழைவு வாயிலில் இருந்து, மத்திய கைலாஷ் நோக்கி செல்லும் இந்த சாலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அதுவும், மேம்பாலத்தை ஒட்டி உள்ள கோட்டூர்புரம் நோக்கி செல்லும் அணுகு சாலை ஒரு பேருந்து மட்டும் செல்லும் வகையில், குறுகலாக உள்ளது. அதனால், அப்பகுதி சிக்னல்களில் வாகனங்கள் சிக்கி, நெரிசல் நீண்ட நேரம் நீடிக்கிறது.கவர்னர் மாளிகை நுழைவு வாயிலில் இருந்து மத்திய கைலாஷ் வரை, 2கி.மீ., துாரத்தில், மாநில அரசின் கீழ் உள்ள நெடுஞ்சாலை, கல்வி, அண்ணா பல்கலை மற்றும் மத்திய அரசின் கீழ் உள்ள, சி.எல்.ஐ.ஆர்., ஆகிய அரசு நிறுவனங்கள் உள்ளன.இதில், மத்திய கைலாஷ் சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதால், 75 அடி அகலம் கொண்ட சாலை, 110 அடி அகலமாக மாற்றப்படுகிறது.இதற்காக, சி.எல்.ஐ.ஆர்., இலவசமாக இடம் வழங்கியது. காம்பவுன்ட் சுவரை இடித்து, விரிவாக்கத்திற்கு தேவையான இடத்தை எடுத்துக்கொண்டு, நெடுஞ்சாலைத் துறை புதிய சுவர் கட்டிக் கொடுத்தது.அதேபோல், அண்ணா பல்கலை, கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை நிறுவனங்களின் கம்பவுன்ட் சுவரை இடித்து, 10 அடி அகலப்படுத்தினால், நெரிசல் குறையும்.அதேபோல், கோட்டூர்புரம் திரும்பும் வாகனங்கள் சிக்னலில் நிற்காமல் செல்லும் வகையில், மேம்பாலத்தின் பக்கவாட்டு அணுகு சாலையை ஒட்டி உள்ள காம்பவுன்ட் சுவரை அகற்றி, தேவையான அளவு விரிவாக்கம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:சென்னையில் மெட்ரோ ரயில் பணி நடக்கும் இடங்களில் நெரிசல் அதிகரித்துள்ளது. பல சிக்னல்கள் அகற்றப்பட்டு, அருகில் யு - டர்ன் அமைத்ததால் நெரிசல் ஓரளவு குறைந்துள்ளது. ஆனால், எந்த பணியும் நடக்காத சர்தார் படேல் சாலையில், நெரிசல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.இதர பகுதியில் ஒரு கி.மீ., துாரத்தை கடக்க 10 நிமிடம் என்றால், சர்தார் படேல் சாலையில், 20 நிமிடத்திற்கு மேல் ஆகிறது.சைதாபேட்டை நீதிமன்றம் அருகில் மற்றும் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம், வி.ஐ.பி.,க்கள் செல்லும்போது, நெரிசல் கால அளவு இல்லாமல் நீடிக்கிறது.சர்தார் பட்டேல் சாலையை ஒட்டி, அரசு நிறுவனங்கள் தான் உள்ளன. கட்டடங்கள் இல்லை. காம்பவுன்ட் சுவர் தான் உள்ளது. அரசு இழப்பீடு வழங்க வேண்டியதில்லை.காம்பவுன்ட் சுவரை இடித்துவிட்டு, சாலையை விரிவாக்கம் செய்யத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.சர்தார் பட்டேல் சாலை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி வசம் உள்ளது. கவர்னர் மாளிகை நுழைவு வாயில் முதல், கேன்சர் மருத்துவமனை மேம்பாலம் வரை சாலையை விரிவாக்கம் செய்ய ஆய்வு செய்து வருகிறோம். அண்ணா பல்கலை, கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளிடம் பேச்சு நடக்கிறது. விரைவில் சாலை விரிவாக்கத்திற்கான நடவடிக்கை வேகம் பெறும் என நம்புகிறோம்.- மாநகராட்சி அதிகாரிகள்