அனல்மின் நிலைய குடியிருப்பில் மர்ம நபர்கள் நடமாட்டத்தால் அச்சம்
எண்ணுார்: இரவு நேரங்களில், மர்ம நபர்கள் நடமாட்டத்தால், அனல்மின் நிலைய குடியிருப்பு மக்கள் அச்சத்தில் உள்ளனர். எண்ணுார், கத்திவாக்கம் மேம்பாலம் கீழ், எண்ணுார் அனல்மின் நிலைய குடியிருப்பு - 3ல், 150க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட, அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு, அனல் மின் நிலைய ஊழியர்கள், தங்கள் குடும்பத்தினருடன் வசிக்கின்றனர். இந்நிலையில், குடியிருப்பு வளாகத்தை கண்காணிக்க, காவலாளி யாரும் இல்லாததால், இரவு நேரங்களில், மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாகி விட்டது. அதன்படி, நள்ளிரவில் உலா வரும் சிலர், பூட்டியிருக்கும் சில வீடுகளில் திருட நோட்டம் பார்க்கின்றனர். இது பல நாட்களாக நடப்பதாகவும், அனல்மின் நிலைய நிர்வாகமும், காவலாளியை போடாமல் அப்படியே விட்டுள்ளனர். குடியிருப்பு வளாகத்திற்குள் வங்கி, ஏ.டி.எம்., உள்ளிட்டவை செயல்படுகின்றன. அப்பகுதி வரை, இரவில் ரோந்து வரும் போலீசார், குடியிருப்பு வளாகத்திற்குள்ளும் ஒரு சுற்று வந்து சென்றால், மர்ம நபர்கள் நடமாட்டம் குறையும் என, அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அனல்மின் நிலைய நிர்வாகம், காவலாளி நியமிக்க வேண்டும். அதுவரை, போலீசார் இரவு ரோந்தின் போது, குடியிருப்பு வளாகத்தில் ஒரு சுற்று வந்து செல்ல வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.