பெண் துாய்மை பணியாளர் கார் மோதியதால் காயம்
தாம்பரம், கிழக்கு தாம்பரத்தில், நள்ளிரவில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண் பணியாளர் ஒருவர், அதிவேகமாக வந்த கார் மோதி காயமடைந்தார். மேடவாக்கத்தை அடுத்த சித்தாலப்பாக்கம், கன்னி கோவில், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. தாம்பரம் மாநகராட்சியில் ஒப்பந்த துாய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். அவரது மனைவி ராணி, 28. அவரும், அங்கேயே துாய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, தாம்பரம் - வேளச்சேரி சாலை, சேலையூரில் துாய்மை பணியில் ஈடுபட்டிருந்த ராணி மீது, அதிவேகமாக வந்த கார் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட ராணிக்கு, தலை, முகம் கால், கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய கார், ஓட்டுநர் குறித்து விசாரிக்கின்றனர்.