அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 2 மணி நேரம் போராடி அணைத்த வீரர்கள்
சென்னை: ராஜா அண்ணாமலை புரம் அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கித் தவித்த மூன்று பேரை, தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டதுடன், இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ராஜா அண்ணாமலை புரம், டி.ஜி.எஸ்., தினகரன் சாலையில், 'ரஹேஜா ரெசிடென்சி' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, நான்கு பிளாக்குகளில், 130 வீடுகள் உள்ளன. இங்கு, 'சி' பிளாக்கின் ஐந்தாவது தளத்தில், 503 என்ற எண் கொண்ட குடியிருப்பில், உள் அலங்கார வடிவமைப்பாளரான பழனியப்பன், 55, என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை 4:00 மணியளவில் இவரது வீட்டில், வேலைக்காரர் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டு, வீடு முழுதும் புகை மண்டலமாக மாறியது. நிலைமை மோசமாவதை அறிந்து, வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறி, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், 70 பேர் வந்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், தீ ஆறாவது தளத்திற்கும் பரவியது. அங்கும், அடுத்தடுத்த தளங்களில் சிக்கியிருந்தோரும் வெளியேற்றப்பட்டனர். வெளியேற முடியாமல் தவித்த முதியவர்கள் மூன்று பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அடுக்குமாடி கட்டடங்களுக்கான இரு நவீன தீயணைப்பு வாகனங்கள், ஐந்து தீயணைப்பு வாகனங்கள், மூன்று குடிநீர் லாரிகள் உதவியுடன், இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கிரைண்டர், 2 'ஏசி' இயந்திரத்தின் 'காஸ்' சிலிண்டர் வெடித்ததில், வீட்டில் இருந்த பொருட்கள் முழுதுமாக எரிந்தன. தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர் ஒருவரும் லேசான காயம் அடைந்தார். மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா; வேறு ஏதேனும் காரணமா என பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தோட்டக்காரரின் துணிச்சல்:
தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில், தோட்டவேலை பார்த்து வருபவர் செல்லதுரை. அவர் தீ விபத்து ஏற்பட்டதை பார்த்து உடனடியாக, பைப் மூலம் தண்ணீரை பீச்சி அடித்து, ஐந்தாவது தளத்தில் சிக்கிய, ஐந்து பேரை மீட்டுள்ளார். அவரது துணிச்சலான செயலை, போலீசார் பாராட்டினர்.