மீன் கடை வைப்பதில் தகராறு வாலிபரை கொன்ற ஐவருக்கு ஆயுள்
சென்னை, சென்னை, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் பாரதி, 34. இவருக்கும், திவ்யா என்பவருக்கும் இடையே, ஜெகஜீவன்ராம் நகர் 5வது தெரு சந்திப்பில் மீன்கடை வைப்பதில் தகராறு ஏற்பட்டது.இந்த தகராறில் பாரதியை, திவ்யாவின் சகோதரர் தினேஷ் கத்தியால் வெட்டினார். அப்போது, தினேசுடன் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவரும் இருந்துள்ளார்.இதனால், ஜெகனை தீர்த்துக்கட்ட பாரதி திட்டம் தீட்டினார். அதன்படி, 2019, செப்., 22ல், ஜே.ஜே.ஆர்., நகர் 5வது தெருவில் உள்ள ஒரு கடை வாசலில் அமர்ந்திருந்த ஜெகனை, தன் நண்பர்களுடன் சேர்ந்து, பாரதி கத்தியால் வெட்டி கொலை செய்தார்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த எம்.கே.பி.நகர் போலீசார், பாரதி, சேத்துப்பட்டு மங்களபுரம் பிரகாஷ், 27, மல்லிகைப்பூ காலனி அருண், 28, ஜே.ஜே.ஆர்.நகர் மேகநாதன், 36, சத்தியமூர்த்தி நகர் பிரவீன்ராஜ், 28, நவீன்குமார், 30, வியாசர்பாடி ஆர்.ஆர்.நகர் அஜித், 24, ஆகியோரை கைது செய்தனர்.இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது மேகநாதன், நவீன்குமார் ஆகியோர் உயிரிழந்தனர். தொடர்ந்து, மற்றவர்கள் மீதான வழக்கு விசாரணை, சென்னை 16வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி எல்.ஆபிரகாம் லிங்கன் முன் நடந்தது. போலீசார் தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.மகாராஜன் ஆஜரானார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ''இறந்த ஜெகனின் உடலில் தலை, முகம் போன்ற பகுதியில் கொடூரமான முறையில் வெட்டி முகத்தை சிதைத்து, மூளை வெளியே வரும் வகையில் கொலை செய்துள்ளனர்.''எனவே, பாரதி, பிரகாஷ், அருண், பிரவீன்ராஜ், அஜித் ஆகியோர், எத்தகைய சட்ட அனுகூலங்களையும் பெறுவதற்கு தகுதியானவர்கள் அல்ல. அனைவர் மீதான குற்றச்சாட்டு, சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பு நிரூபித்துள்ளது என்பதால், ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது,'' என தீர்ப்பளித்தார்.