முதல் முறையாக 400 கி.வோ., வழித்தடத்தில் மணலி - கொரட்டூர் இடையே மின் வினியோகம்
சென்னை, சென்னையில் தரைக்கு அடியில், 400 கிலோ வோல்ட் திறனில் கேபிள் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருவதில், முதல்முறையாக மணலி - கொரட்டூர் வழித்தடத்தில் மின்சாரம் எடுத்து செல்லும் பணி துவங்கியுள்ளது. தமிழகத்தில், அனல், நீர் உள்ளிட்ட மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின் வாரியம், பல திறன் உடைய துணைமின் நிலையங்களுக்கு, அதே திறனிலான மின் வழித்தடங்களில் எடுத்து செல்கிறது. அதன்படி, 230 கி.வோ., வரை கேபிள் மற்றும் மின் கோபுர வழித்தடங்களிலும், அதற்கு மேல், மின் கோபுர வழித்தடத்தில் மட்டும் எடுத்து செல்லப்படுகிறது. சென்னையில் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதற்கு ஏற்ப கூடுதல் மின்சாரத்தை எடுத்து வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், மின் கோபுர வழித்தடங்கள் அமைக்க இடவசதி இல்லை. இதனால், 1,100 கோடி ரூபாய் செலவில் சென்னையில், 400 கி.வோ., திறனில் ஒட்டியம்பாக்கம் - கிண்டி, பாரிவாக்கம் - கிண்டி, மஞ்சம்பாக்கம் - கொரட்டூர் இடையே கேபிள் வழித்தடங்களில் மின்சாரம் எடுத்து வரும் பணி நடக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் அலமாதி - காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம், 400 கி.வோ., மின் கோபுர வழித்தடத்தில், பாரிவாக்கம் என்ற இடத்தில் இருந்து, கிண்டிக்கு, 16 கி.மீ., கேபிள் வழித்தடம் அமைக்கப்படுகிறது மணலி - கொரட்டூர் 400 கி.வோ., வழித்தடத்தில் மஞ்சம்பாக்கம் என்ற இடத்தில் இருந்து கொரட்டூர் துணைமின் நிலையம் வரை, 12 கி.மீ., கேபிள் வழித்தடம் அமைக்கப்படுகிறது செங்கல்பட்டு மாவட்டம் ஒட்டியம்பாக்கம் - கிண்டி இடையில், 18 கி.மீ., மின் வழித்தடத்தம் அமைக்கப்படுகிறது; இதில் ஒட்டியம்பாக்கம் - வேளச்சேரி ரயில் நிலையம் வரை மின் கோபுர வழித்தடமும், அங்கிருந்து கிண்டிக்கு, 9 கி.மீ., கேபிள் வழித்தடமும் அமைக்கப்படுகின்றன. கடந்த, 2020 மே மாதம் துவங்கிய இந்த பணிகளை, 2023 இறுதியில் முடிக்க திட்டமிடப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட காரணங்களால், பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின் மஞ்சம்பாக்கம் - கொரட்டூர் இடையே கேபிள் வழித்தட பணி முடிந்துள்ளது. தற்போது, சென்னையில், 400 கி.வோ., திறனில் கேபிள் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருவதில், முதல்முறையாக மணலி - கொரட்டூர் வழித்தடத்தில் மின்சாரம் எடுத்து செல்லும் பணி துவங்கியுள்ளது. இந்த வழித்தடம், 800 மெகா வாட் மின்சாரம் எடுத்து செல்லும் திறன் உடையது. மற்ற இரு கேபிள் வழித்தட பணிகளும், 90 சதவீதம் முடிந்துள்ளது. அவற்றில் இரு மாதங்களுக்குள் பணிகளை முடித்து, மின்சாரம் எடுத்து செல்ல மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.