உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெல்ட் ஏரியாவில் வசிப்போருக்கும்...பட்டா! 4 மாவட்டங்களில் கணக்கெடுப்பு

பெல்ட் ஏரியாவில் வசிப்போருக்கும்...பட்டா! 4 மாவட்டங்களில் கணக்கெடுப்பு

காஞ்சிபுரம்:சென்னையின் 'பெல்ட் ஏரியா'வாக 1962ல் குறிப்பிடப்பட்ட 532 வருவாய் கிராமங்களில், அரசு நிலம் மற்றும் நீர்நிலை பகுதிகளில் பல ஆண்டுகளாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க, சிறப்பு செயலாக்க திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.சென்னையைச் சுற்றியுள்ள அரசு நிலம், நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், எதிர்கால தேவையை கருதியும், 1962ல் 'பெல்ட் ஏரியா' என குறிப்பிடப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.நகரமயமாதல் காரணமாக, சென்னையைச் சுற்றி 32 கி.மீ., சுற்றளவில் பெல்ட் ஏரியாவாக குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கு பட்டா வழங்கக்கூடாது என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

சிறப்பு திட்டம்

அரசாணை பிறப்பிக்கும்போது, சென்னை சுற்றிய பகுதிகள் சைதாப்பேட்டை மாவட்டமாக இருந்தது. இதில், பொன்னேரி, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதுார், சைதாப்பேட்டை என நான்கு தாலுகாக்கள் பெல்ட் ஏரியாக்களில் இருந்தன.தற்போது இந்த பகுதிகள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, பல தாலுகாக்களாக உள்ளன. பெல்ட் ஏரியாவாக அறிவிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களிலும் 532 வருவாய் கிராமங்கள் உள்ளன.சென்னையின் அசுர வளர்ச்சி, அதை ஒட்டிய மாவட்டங்களிலும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மக்கள் தொகை பெருக்கம், வீடுகள் கட்டுமானம் அதிகரித்து வருகிறது.சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் பெல்ட் ஏரியாவில் வசிப்போருக்கு, மின்சார வசதி, ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசு ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பட்டா வழங்கப்படவில்லை.பலதரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் சிலரும், பெல்ட் ஏரியா பகுதிகளுக்கு வீடு, மனைகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என, சட்டசபையில் குரல் கொடுத்தனர்.இந்நிலையில், பட்டா வழங்குவதற்கான நடைமுறையை உருவாக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.பெல்ட் ஏரியாவில் பட்டா இல்லாமல் அரசு நிலங்களில் வசிப்போருக்கு, புதிய சிறப்பு திட்டம் ஒன்றை உருவாக்கி, அதன் வாயிலாக பட்டா வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

கடிதம்

இதற்காக, வருவாய் துறை அமைச்சர் தலைமையில் 19 பேர் உடைய உயர்மட்ட குழு, மார்ச் 1ல் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, நில நிர்வாக கமிஷனர், நான்கு மாவட்ட கலெக்டர்களுக்கும், கடிதம் எழுதியுள்ளார்.அதன் அடிப்படையில், பெல்ட் ஏரியாவில் உள்ள வருவாய் கிராமங்களில் அரசு நிலத்தில் வீடு கட்டி வசித்து வருவோரின் விபரங்களை, குறுவட்டம் வாரியாக சேகரிக்க, தாசில்தார்களை கலெக்டர்கள் நியமித்துள்ளனர்.சென்னையில் சைதாப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இதற்கான கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது.இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினர், வீடுதோறும் சென்று, அரசு ஆட்சேபனைக்குரிய நிலமா, ஆட்சேபனையற்ற நிலமா என கேட்கின்றனர்.தவிர, குடும்ப தொழில், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, வருமானம், உறுப்பினர் எண்ணிக்கை, அரசு ஊழியரா போன்ற விபரங்களையும் சேகரித்து வருகின்றனர்.ஆட்சேபனை இல்லாத நிலமாக இருந்தால், அவர்களுக்கு பட்டா வழங்கவும், ஆட்சேபனைக்குரிய நீர்நிலை நிலமாக இருந்தால், மாற்று இடத்தில் குடியமர்வு செய்யவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட பின், பட்டாவுக்கான தடை உத்தரவுகளை தளர்த்தி, புதிய அரசாணை பிறப்பித்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பட்டா கிடைக்கும் என்பதால், அங்கு வசிப்போர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நீர்நிலைகளுக்கு பட்டா கிடையாது?

தமிழக அரசு, எதிர்கால அரசின் தேவைகளுக்காக, 1962ல் பெல்ட் ஏரியாவாக குறிப்பிட்ட 32 கி.மீ., சுற்றளவில் யாருக்கும் பட்டா வழங்காமல், பல நிலங்களை அப்படியே வைத்துள்ளது.இந்த விலை மதிப்புமிக்க நிலங்களில் ஆக்கிரமித்துள்ள நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டால், வளர்ந்து வரும் நகரமயமாதல், மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, ரேஷன் கடை, கழிப்பறை, அங்கன்வாடி, அரசு கட்டடங்கள் போன்றவை கட்டுவதற்குகூட இடமில்லாத சூழல் உருவாகும். பட்டா வழங்கினால், ஆக்கிரமிப்புகளைஇது ஊக்குவிக்கும் என, அரசின் கவனத்திற்கு உயர் அதிகாரிகள் கொண்டுவந்துள்ளனர். சிறப்பு செயலாக்க திட்டம் குறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வந்து உள்ளது. இதன் அடிப்படையில் 'பெல்ட் ஏரியா' என கூறப்படும் தாலுகாக்களில் ஆய்வு நடக்கிறது. ஆனால், இந்த தாலுகாக்களில் நீர்நிலைகள் அல்லாத பிற இடங்களில், அரசுக்கு பயன்படாது என, தெரியவந்த நிலங்களில் இருப்போருக்கு மட்டுமே பட்டா வழங்க முடியும். ஆட்சேபனைக்குரிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்க வாய்ப்பு இல்லை. குறிப்பாக, நீர்நிலைகள் தவிர்த்த இடங்களில் இருப்போரின் கோரிக்கை மட்டுமே இதில் ஆய்வு செய்யப்படும்.நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்க தடைவிதித்து உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் உள்ள நிலையில், இதில் கவனமாக இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Janarthanan
ஆக 11, 2024 17:11

ஓட்டுக்காக தமிழகத்தை நாசமாக்க திட்டம் போடுது??


Kanns
ஆக 11, 2024 09:10

Must be Stopped As it Will Encourage More Usurping of Govt-Public Lands. However, Taking Family Income by Aadhar linked-PANs, they can be Given 30Storey TNSCB Flats On Rent. Only Poorest Real-Handicapped & vAgeds be given Free


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை