உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடிக்கடி புறநகர் மின்சார ரயில்கள் ரத்து திடீர் அறிவிப்புகளால் தொடரும் அவதி

அடிக்கடி புறநகர் மின்சார ரயில்கள் ரத்து திடீர் அறிவிப்புகளால் தொடரும் அவதி

சென்னை, மார்ச் 18- சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி தடத்தில் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.போதிய ரயில்கள் இல்லாததால், பயணியர் அவதிப்பட்டு வரும் நிலையில், வழக்கமாக செல்லும் ரயில்களின் சேவையும் அடிக்கடி ரத்து செய்யப்படுகிறது. ரயில் பாதைகள் மற்றும் யார்டு பராமரிப்பு பணி நடப்பதாக கூறி, கடந்த மாதம் முதல் கடந்த 14ம் தேதி வரையில் மட்டும், 150க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.இதற்கு, மாற்றாக குறைந்த அளவில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் போதுமானதாக இல்லை. சில நாட்களில், நள்ளிரவு ரயில்களின் சேவை ரத்து, அன்றைய தினம் மாலை நேரங்களில் வெளியிடப்படுகிறது. இதனால், போதிய மின்சார ரயில் வசதிகள் கிடைக்காமல் பயணியர் அவதிப்படுகின்றனர்.இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:சென்ட்ரல் - ஆவடி, அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை தடத்தில், பல ரயில் நிலையங்களில் ரயில்களுக்கான கால அட்டவணை இல்லாத நிலையில் தான் இருக்கிறது. பயணியர் தேவை அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் ரயில்களை இயக்காமல், இருக்கும் ரயில்களை அடிக்கடி ரத்து செய்வது பயணியர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பராமரிப்பு பணி காரணமாக, மறு அறிவிப்பு வெளியிடாமல் 55க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள், கடந்தாண்டில் ரத்து செய்யப்பட்டன. இந்த ரயில்களின் சேவை இன்னும் துவங்கப்படவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.ரயில்கள் பாதுகாப்பாக இயக்க, பராமரிப்பு பணி என்பது தவிர்க்க முடியாதது. சிறப்பு ரயில்கள் இயக்கம் போன்ற மாற்று ஏற்பாடுகளை முடிந்த வரை செய்து வருகிறோம். மாநகர பேருந்துகளையும் இயக்க அறிவுறுத்துகிறோம். சென்னை புறநகரில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்களை, மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.- அதிகாரிகள்,சென்னை ரயில் கோட்டம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ