முழு உடல் பரிசோதனை சேவை பயனாளிகள் கருத்து கூற வசதி
சென்னை:சென்னை ஓமந்துாரார் பல்நோக்கு மருத்துவமனையில், 10 கோடி ரூபாயில், முழு உடல் பரிசோதனை மையம், 2018 ஜூன் 8ம் தேதி துவங்கப்பட்டது. இங்கு, 1,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரையிலான கட்டணத்தில், கோல்டு, டைமண்ட், பிளாட்டினம், பிளாட்டினம் பிளஸ் என, நான்கு வகையான பரிசோதனை வசதிகள் உள்ளன. இந்த மையம் வாயிலாக, 75,000க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர்.இதற்கிடையே, தமிழகத்திலேயே முதன்முறையாக, கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை அறியும் பரிசோதனை, மரபணு ரீதியான பாதிப்பு உள்ளதா என்பதை அறியும், 'டபுள் மார்க்கர்' சோதனை, மூக்கு எலும்பு, கழுத்து பகுதி, ரத்த ஓட்டம் உள்ளிட்டவற்றை அறியும் வளர்ச்சி பரிசோதனையும் செய்யப்படுகிறது.இந்நிலையில், முழு உடற்பரிசோதனை மையத்தின் தரத்தை அறியும் சேவை துவங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மருத்துவமனை இயக்குனர் மணி, ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்தகுமார் ஆகியோர் கூறியதாவது:தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து, முழு உடல் பரிசோதனை குறித்து கருத்து அறியும் மென்பொருள் வடிவமைக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.பரிசோதனைக்கு வருவோரின் மொபைல் போன் எண்ணுக்கு அனுப்பப்படும் இணைய இணைப்புக்கு சென்று கருத்து பதிவிடலாம்.பரிசோதனை முன்பதிவு முதல் மருத்துவ ஆலோசனை வரையிலான சேவைகள் குறித்து, ஒன்று முதல் ஐந்து நட்சத்திரம் வரை தரவரிசை செய்யலாம்.கருத்துகளை எழுத்துப்பூர்வமாகவோ, ஒலி வடிவிலோ பதிவிடலாம். அதன் அடிப்படையில் குறைகள் தீர்க்கப்பட்டு, சேவை மேம்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.