கோலடி சாலையில் குப்பை மலை திருவேற்காடில் தினம் தினம் அவதி
திருவேற்காடு, திருவேற்காடு கோலடி சாலையில், 4,800 சதுர அடி நிலப்பரப்பில், திருவேற்காடு நகராட்சிக்கு சொந்தமான குப்பை சேமிக்கும் இடம் உள்ளது. இங்கு, 18 வார்டுகளில் இருந்து தினமும், 10 டன் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, அதிக அளவில் குப்பை கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது. சுற்றுச் சுவரை தாண்டி 20 அடி உயரத்திற்கு மேல் குப்பை மலை போல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. குப்பை சேமிக்கும் இடத்தை சுற்றி, தேவி நகர், நேதாஜி தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட தெருக்களில் 500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.குப்பை கிடங்கு அருகே, நவீன எரிவாயு தகனமேடை அமைந்துள்ளது. இந்த தகன மேடையில் திருவேற்காடு, கோலடி, அயனம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இறந்தவர்கள் உடல்கள் கொண்டு வரப்பட்டு எரிக்கப்படுகின்றன. குப்பை கிடங்கால், இறுதி சடங்கு செய்வோர் துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள், அங்கு குப்பை கொட்டுவதை தடை செய்து, குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.