ரூ.4.60 லட்சம் போதை பொருள் கடத்தி வந்த மே.வங்க நபர் கைது
அம்பத்துார் பட்டரைவாக்கம் பகுதியில், அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், நேற்று காலை கண்காணிப்பில் ஈடுபட்டனர்.இந்த நிலையில், மேனாம்பேடு, பிள்ளையார் கோவில் தெரு சந்திப்பில் பையுடன் சுற்றித்திரிந்த வடமாநில நபர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளார்.போலீசார் அவரை மடக்கி பிடித்து, பையை சோதனை செய்தனர். இதில், கஞ்சா மற்றும் பிரவுன் சுகர் போதை பொருள் இருப்பது தெரிந்தது. விசாரணையில், மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த தாய்துாள், 30, என்பதும், பல வகையான போதை பொருட்களை சென்னைக்கு கடத்தி வந்து, வடமாநில வாலிபர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.தாய்துாளை கைது செய்த போலீசார், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 கிலோ கஞ்சா, 3.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 24 கிராம் பிரவுன் சுகர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.