ஜி.எச்.,சில் மூதாட்டியிடம் 4 சவரன் நகை ஆட்டை
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் கம்மார்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜீகாந்தம், 69. மூதாட்டிக்கு இடது கையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, திருவள்ளூர் இந்திரா நகரில் உள்ள மகன் சந்திரசேகர் வீட்டில் தங்கி, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.நேற்று மதியம் 1:30 மணியளவில், மருத்துவமனையை விட்டு மூதாட்டி வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது 30 வயது இளைஞர், 'ஸ்கேன்' எடுக்க வேண்டும் எனக் கூறி நகையை கழட்டி பையில் வைத்துக்கொள்ளும்படி கூறி உள்ளார். மூதாட்டி 4 சவரன் செயினை கழற்றி பையில் போட்டபோது, அதை வாங்கி கையில் வைத்துக் கொண்ட இளைஞர், மூதாட்டியை ஸ்கேன் அறைக்கு செல்லுமாறு கூறி விட்டு, அங்கிருந்து மாயமானார். இது குறித்து திருவள்ளூர் நகர போலீசார் விசாரிக்கின்றனர்.