செங்குன்றம்போக்குவரத்து நிறைந்த சாலை ஆக்கிரமிப்பிற்கு, போலீசாரே ஆசி வழங்கி உள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.சென்னை, செங்குன்றம் ஜி.என்.டி., சாலையில், ஆறு மாதங்களுக்கு முன், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த விளம்பர பேனர், ஸ்டாண்டு, தடுப்பு மற்றும் ஆட்டோ நிறுத்தம் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை, போக்குவரத்து போலீசார் அகற்றினர்.இந்நிலையில், கடந்த மாதம் முதல், 'மால்' ஹோட்டல், பெட்ரோல் பங்க் தடுப்பு, சாலையில் நிறுத்தப்படும் விளம்பர ஸ்டாண்டுகள் என, புதிய ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அவற்றால் மாநகர பேருந்து, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உட்பட அனைத்து வாகனங்களும், போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன.அதனால், குறித்த நேரத்தில் செல்ல வேண்டிய பள்ளி, கல்லுாரி மாணவர்கள், நோயாளிகள் காலதாமதமாகி அவதிப்படுகின்றனர்.அவ்வப்போது சிறிய விபத்துகளும் தொடர்கின்றன. போக்குவரத்து போலீசார், செங்குன்றம் பேருந்து நிலையம், நெல், அரிசி மார்க்கெட், சோத்துப்பாக்கம் சாலை சந்திப்பு உள்ளிட்ட ஜி.என்.டி., சாலையில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க முன் வரவில்லை. மாறாக, திருவள்ளூர் கூட்டுச்சாலையில், இரு சக்கர வாகனம் முதல், கனரக வாகனம் வரை வழக்கு பதிவு செய்து, அபராதம் வசூலிப்பதில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர்.புத்தாண்டு, பொங்கல் பண்டிகை காரணமாக அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், ஜி.என்.டி., சாலை ஆக்கிரமிப்பாளர்களுடன் வாக்குவாதம் மற்றும் மோதலில் ஈடுபடும் நிலை ஏற்படுகிறது. மேற்கண்ட சாலை ஆக்கிரமிப்புகளுக்கு, போக்குவரத்து போலீசாரின், 'ஆசி' கிடைத்திருப்பதால், ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது எல்லையை மேலும் விரிவுபடுத்தி வருகின்றனர்.அதனால், ஆவடி போலீஸ் கமிஷனரகத்திற்கு கெட்ட பெயர் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பாதிக்கப்படும் முன், ஆவடி போலீஸ் கமிஷனர், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றினால், மக்கள் நிம்மதி அடைவர்.