| ADDED : ஆக 28, 2025 12:00 AM
போரூர், போரூர் - குன்றத்துார் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் நடைபாதை கடைகளை அகற்றாததால், போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. பரங்கிமலை - பூந்தமல்லி சாலை மற்றும் குன்றத்துார் - வளசரவாக்கம், ஆற்காடு சாலை ஆகியவற்றை இணைக்கும் நான்குமுனை சந்திப்பாக போரூர் சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பைச் சுற்றி ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன. தவிர, மெட்ரோ ரயில் பணிகளும் நடந்து வருகின்றன. நெடுஞ்சாலைத் துறை பராமரிக்கும், போரூர் சந்திப்பில் இருந்து குன்றத்துார் செல்லும் ஆற்காடு சாலையில், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அத்துமீறி நிறுத்தப்படுகின்றன. இதனால், 'பீக்ஹவர்ஸ்' எனும் அலுவலக நேரங்களில், காலை மற்றும் மாலை நேரத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலை உள்ளது. மேலும், நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்கின்றனர். இதனால் அவர்கள், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, போரூர் - குன்றத்துார் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் நடைபாதை கடைகளை அகற்றி, போக்குவரத்தை சீர்செய்ய மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.