உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மனைவியின் கள்ளக்காதலனை வெட்டி கொன்ற கணவர் கைது

மனைவியின் கள்ளக்காதலனை வெட்டி கொன்ற கணவர் கைது

திருவேற்காடு: திருவேற்காடில் மனைவியின் கள்ளக் காதலனை கணவர் வெட்டி கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். திருவேற்காடு, பெருமாளகரம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் டில்லிபாபு, 27. இவர், மேல் அயனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகாத இவர், பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று மதியம், டில்லி பாபு பணிபுரியும் நிறுவனத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், நிறுவன வளாகத்தில் அவருடன் பேசி கொண்டிருந்தனர். திடீரென அவர்களுக் குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவர், மறைத்து வைத்திருந்த கத்தியால் டில்லிபாபுவை சரமாரியாக வெட்டினார். பின், இருவரும் அங்கிருந்து தப்பினர். தகவலறிந்த திருவேற்காடு போலீசார், உடலை பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளின் அடிப்படையில், திருவேற்காடு, பெருமாளகரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வினோத், 24, மற்றும் அவரது நண்பர் மோகன், 23, ஆகியோரை, கைது செய்து விசாரித்தனர். இதில், ஒரே பகுதியில் வசிப்பதால், டில்லிபாபுவுக்கு வினோத்தின் மனைவி நிவேதாவுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதை வினோத் கண்டித்துள்ளார். இருப்பினும் கள்ளக் காதலை தொடர்ந்து வந்துள்ளனர். இது தொடர்பாக, நேற்று முன்தினம் இரவு வினோத், டில்லிபாபுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நண்பருடன் டில்லிபாபுவின் நிறுவனத்திற்கு சென்ற வினோத், அவரை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை