உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கரையே இல்லாத கொசஸ்தலை ஆறு வெள்ளம் பெருக்கெடுத்தால் பேராபத்து

கரையே இல்லாத கொசஸ்தலை ஆறு வெள்ளம் பெருக்கெடுத்தால் பேராபத்து

- நமது நிருபர் - கொசஸ்தலை ஆற்றின் கரைகள், 15 கோடி ரூபாய் செலவில் பலப்படுத்தப்பட்ட நிலையில், சில இடங்களில் கரை இல்லாததால், மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து, மணலிபுதுநகர், சடையங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் மற்றும் புழல் ஏரியில் இருந்து, மழைக்காலத்தில் திறக்கப்படும் உபரிநீர், கால்வாய் வழியே, சென்னை மாநகராட்சியின் எல்லையான, வெள்ளிவாயல், மணலிபுதுநகர், சடையங்குப்பம் அருகே, எண்ணுார் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும். கடந்த 2015 கன மழையால் நீர்த்தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 90,000 கன அடி அளவிற்கு உபரி நீர் திறக்கப்பட்டதால், மணலிபுதுநகர், சடையங்குப்பம் பகுதிகளில் உள்ள கால்வாயின் பக்கவாட்டு கரை உடைந்தது. ஊருக்குள் இருந்து, இக்கால்வாயுடன் இணையும் பிரதான கால்வாய்கள் வழியாக, வெள்ளநீர் பின்னோக்கி ஏறி, குடியிருப்புகளை மூழ்கடித்தன. இதுபோல் பல ஆண்டுகளாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின், இப்பகுதியை மூன்று முறை நேரடியாக பார்வையிட்டு, கரைகளை பலப்படுத்த உத்தரவிட்டார். அதன்படி, நாப்பாளையம் மேம்பாலம் துவங்கி, மணலிபுதுநகர் ஆர்.எல்., நகர் வரை, 15 கோடி ரூபாய் செலவில், வலதுபுறம் 5 கி.மீ., மற்றும் இடதுபுறம் 2 கி.மீ., என, 7 கி.மீட்டருக்கு கரைகளை பலப்படுத்தும் பணி, 2022, நவம்பரில் துவங்கியது. இதில், 4 - 5 மீட்டர் உயரத்திற்கு கரைகள் பலப்படுத்தப்பட்டன. தவிர, கால்வாயில் கரை உடைப்பு ஏற்பட்ட, வடிவுடையம்மன் நகர், ஆர்.எல்., நகர், ஜெனிபர் நகர் வரையிலான, ஒரு கி.மீட்டருக்கு பக்கவாட்டில் கான்கிரீட் கற்கள் பதித்து, பிரமாண்ட தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. மேலும், மகாலட்சுமி நகர், வடிவுடையம்மன் நகர், ஆர்.எல்., நகர் போன்ற பகுதிகளில், ஊருக்குள் இருந்து இணையும் பிரதான கால்வாய்களுக்கு, மதகுகளும் அமைக்கப்பட்டன. அபாயம் ஆனால், மணலிபுதுநகரின், ஆர்.எல்., நகரில் இருந்து, எலந்தனுார் வரையிலான கரைகள் பலப்படுத்தப்படவே இல்லை. மாறாக, சமீபத்தில் பெய்த மழைக்கு, கரைகள் கரைந்து பலவீனமாக காட்சியளிக்கிறது. தவிர, எலந்தனுார் - சடையங்குப்பம் இடையே, கொசஸ்தலை ஆறுடன் கட்டப்பட்டு வந்த மாநகராட்சியின் பிரமாண்ட வடிகால்வாய் பணியும் முடியாமல் உள்ளது. வடிகால்வாய் பணி முடியாத இடத்தில் இருந்து, சடையங்குப்பம் வரையிலுமே, மண் கரைகூட இல்லாமல், சாலை மட்டத்திற்கு கொசஸ்தலை நீர்வழித்தடம் உள்ளது. மக்களை காப்பாற்ற, பல கோடி ரூபாய் செலவழித்துள்ள நீர்வளத்துறை, எலந்தனுார் - சடையங்குப்பம் வரையிலான பகுதிகளில் கரையே இல்லாமல் அலட்சியம் காட்டி வருகிறது. அரைகுறையாக விடப்பட்ட, சென்னை மாநகராட்சியின் வடிகால்வாய், அங்கு துண்டாடப்பட்டிருக்கும் கொசஸ்தலை ஆற்றின் கரை, எலந்தனுார் - சடையங்குப்பம் ஏரி கலங்கல் வரை கரை இல்லாதது போன்ற பிரச்னைகளால், மழைக்காலத்தில் அதிகப்படியான நீர் கால்வாய் வழியே வெளியேறினால், மணலிபுதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்படும். எனவே நீர்வளத்துறை அதிகாரிகள், கரைகளை சீரமைக்க வேண்டும். நிரந்தர தீர்வாக, மணலிபுதுநகரில் அமைக்கப்பட்டது போல் சடையங்குப்பம் வரை கான்கிரீட் கற்கள் பதித்து கரைகளை பலப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சடையங்குப்பம் அருகே, சென்னை மாநகராட்சியின் வடிகால்வாய் பணி முழுமையடையாததால், அங்கு கரை பலவீனமாக உள்ளது. அதனால் எலந்தனுார் - சடையங்குப்பம் வரை கரை அமைக்கும் பணிக்கு, நிதி கோரப்பட்டுள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !