உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கூவத்தில் கட்டட கழிவுகளை அகற்றாவிட்டால்... தினமும் அபராதம்! தேசிய ஆணையத்திற்கு தீர்ப்பாயம் எச்சரிக்கை

கூவத்தில் கட்டட கழிவுகளை அகற்றாவிட்டால்... தினமும் அபராதம்! தேசிய ஆணையத்திற்கு தீர்ப்பாயம் எச்சரிக்கை

சென்னை : 'கூவத்தில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகளை, வரும், 10ம் தேதிக்குள் அகற்றாவிட்டால், ஒவ்வொரு நாளும் அபராதம் விதிக்கப்படும்' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே, 21 கி.மீ.,ருக்கு இரண்டடுக்கு மேம்பாலம் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதற்கான பணிகள், 5,855 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகின்றன.இப்பணிக்காக, சென்னையின் பிரதான நீர்வழித்தடங்களில் ஒன்றான, மழைக்காலத்தில் தண்ணீர் அதிகம் ஓடும் கூவம் ஆற்றின் பல இடங்களில், கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு, துாண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.அமைந்தகரை உள்ளிட்ட இடங்களில், மே மாதம் முதல் பணிகள் நடந்து வரும் நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கினால், கட்டட கழிவுகளால் ஆற்றில் நீரோட்டம் பாதிக்கும் நிலை உள்ளது. இதனால், கூவம் ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.இதுகுறித்து, மே 9ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. கட்டட கழிவுகளை, செப்., 30க்குள் அகற்ற வேண்டும் என, தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால், இதுவரை கட்டட இடிபாடுகள் அகற்றப்படவில்லை.கட்டட கழிவுகளை அகற்றி, ஆற்றில் இருந்து வெளியே எடுத்துச் செல்வது சிரமம். எனவே, அவற்றை அகற்றி, கரையோரத்தில் கொட்டி வைத்து, ஜனவரி மாதம் மழை ஓய்ந்த பின், மேம்பால பணிகளை மீண்டும் துவக்கலாம் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கருதியது. இந்நிலையில், 'செப்., 30க்குள் கட்டட கழிவுகளை அகற்ற வேண்டும்' என, தீர்ப்பாயம் கறாராக தெரிவித்தது.எனினும், கட்டட கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நியமித்த ஒப்பந்த நிறுவனம் மேற்கொள்ளாமல், கட்டுமான பணிகளை தொடர்கிறது.வடகிழக்கு பருவமழை, இம்மாதம் மூன்றாவது வாரத்தில் துவங்கும் என, மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீரோட்டத்திற்கு வழியில்லை என்றால், வெள்ள பாதிப்பு நிச்சயம் ஏற்படும் என, பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'கூவத்தில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகளை அகற்ற, வரும் 10ம் தேதி வரை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அனுமதி வழங்கியுள்ளார்' என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இதைத் தொடர்ந்து, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'தீர்ப்பாயம் உத்தரவிட்ட பிறகும், கட்டட கழிவுகளை அகற்ற, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தாமதம் செய்வது சரியல்ல. கூவம் கரையோரத்தில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகளை, வரும் 10ம் தேதிக்குள் அகற்ற வேண்டும். இல்லையென்றால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் விதிக்கப்படும்' என உத்தரவிட்டனர்.

ரூ.1 லட்சம் வரை அபராதம்

தாம்பரம் சானடோரியம், 'மெப்ஸ்' வளாகத்தில் தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவுநீரால், திருநீர்மலை ஏரி மாசுபடுவதாக வழக்கு தொடரப்பட்டது.அதை விசாரித்த தீர்ப்பாயம், இது தொடர்பாக ஏழு கேள்விகளை எழுப்பி, ஆக., 28க்குள் பதில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டது.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்யாதது குறித்து, தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்தது.நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'வழக்கின் அடுத்த விசாரணை தேதியான அக்., 17க்கு முன், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும், ஒரு ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்' என எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை