உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தவறான வடிகால்வாய் கட்டுமான பணி பூந்தமல்லி சாலையில் தேங்கும் மழைநீர்

தவறான வடிகால்வாய் கட்டுமான பணி பூந்தமல்லி சாலையில் தேங்கும் மழைநீர்

பூந்தமல்லி :பூந்தமல்லி நகராட்சியில், தவறாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால்வாயால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் தேங்கி, அப்பகுதியில் வசிப்போர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பூந்தமல்லி, கரையான்சாவடி நாவலர் தெருவில், பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த ஆண்டு மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது. இந்த தெருவில் தேங்கும் மழைநீர், மேற்கு திசை நோக்கி கரையான்சாவடி - ஆவடி சாலையில் உள்ள மழைநீர் வடிகால்வாய் வழியே சென்று வெளியேற வேண்டும். ஆனால், பூந்தமல்லி நகராட்சி பொறியியல் துறையினர், கட்டுமான பணியை தவறாக மேற்கொண்டதால், மழைநீர் எதிர் திசையில் கிழக்கு நோக்கி செல்கிறது. இதனால், நாவலர் தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாயின் 'மேன்ஹோல்' மூடி வழியாக மழைநீர் வெளியேறி, அருகில் உள்ள சென்னீர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பவித்ரா நகர், அம்பாள் நகர், பிரதீவ் நகர் பகுதியை சூழ்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், மழைநீர் கால்வாயில், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் கலந்து வெளியேறுவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற் பட்டுள்ளது. 24 மணி நேரமும் தேங்கி நிற்கும் நீரால், அந்த பகுதியில் உள்ள சாலை சேதமாகி குண்டும், குழியுமாக உள்ளது. அதனால், கரையான்சாவடி- - ஆவடி சாலையில் உள்ள வடிகால்வாய் வழியே மழைநீர் செல்லும் வகையில், வடிகால்வாயை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியில் வசிப்போர் எதிர்பார்க்கின்றனர்.

மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

மழை பெய்தாலே, அண்ணனுார் அன்னை சத்யா நகர் மற்றும் சாலிகிராமம் பிரான் தெருவில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது. ஆவடி மாநகராட்சி, அண்ணனுார் 31வது வார்டு, அன்னை சத்யா நகரில், ஸ்டாலின் ஒன்று முதல் 10 வரை தெருக்கள் உள்ளன. இதில் ஏழாவது தெருவில் 30க்கும் மேற்பட்ட வீடுகள், சர்ச் ஆகியவை உள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், மாநகராட்சி சார்பில் இங்கு, சிமென்ட் சாலை போடப்பட்டது. நீர் வாட்டம் பார்த்து சாலை அமைக்காததால், நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு, சாலையில் குளம்போல் வெள்ளம் தேங்கியுள்ளது. பலத்த மழை பெய்தால், வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அச்சத்தில் பகுதிமக்கள் பீதியில் உள்ளனர். வேலை, பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியர் தண்ணீரில் நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை புகார் அளித்தும், மாநகராட்சி கண்டுகொள்ளவில்லை என, பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதேபோல், கோடம்பாக்கம் மண்டலம், சாலி கிராமம் 129வது வார்டில் உள்ள பிரான் தெரு, விருகம்பாக்கம் ஆற்காடு சாலை மற்றும் கே.கே., நகர் ராஜமன்னார் சாலையை இணைக்கிறது. ஆற்காடு சாலையைவிட, ராஜமன்னார் சாலை தாழ்வாக இருப்பதால், ஒவ்வொரு மழைக்கும் குளம்போல் தண்ணீர் தேங்கும். இந்நிலையில், அவ்வப்போது பெய்து வரும் மழையால், இத்தெருவில் நேற்று மழைநீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி