ஒரகடம்:காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதில், பணிபுரியும் பெரும்பாலான தொழிலாளர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.இரவு வேளையில் பணி முடிந்து இருப்பிடம் திரும்பும் வடமாநிலத் தொழிலாளர்களை குறிவைத்து, வழிப்பறி, மொபைல் போன் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள், அடிக்கடி அரங்கேறுகின்றன.இரவு வேளையில், அதிவேக திறன் கொண்ட பைக்கில் வரும் மர்ம நபர்கள், சிப்காட் சாலையில் நடந்து வரும் வட மாநிலத் தொழிலாளர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம் மற்றும் மொபைல் போன் பறித்து அங்கிருந்து அசுர வேகத்தில் பறக்கின்றனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த அல்தாப், 18, என்பவர், ஒரகடம் அடுத்த கிருஷ்ணா கல்லுாரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து, வைப்பூர் சிப்காட் சாலை வழியே நடந்து சென்றார்.அப்போது, 'ஆர்15' பைக்கில் வந்த மர்ம நபர்கள் மூவர், அல்தாப்பை மடக்கி மொபைல் போனை தருமாறு மிரட்டினர். அவர் மறுக்கவே, மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் வெட்டி அங்கிருந்து தப்பினர்.அதேபோல், டி.வி.எஸ்., தொழிற்சாலையில் பணிபுரியும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த கண்ணய்யா குமார், 19, என்பவர் பணி முடிந்து இரவு வீடு திரும்புகையில், அதே கும்பல் அவரது வலது காலில் வெட்டி, மொபைல் போனை பிடுங்கி தப்பியது.இதையடுத்து, உறவினர் திருமணத்திற்காக வல்லக்கோட்டை வந்த, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாரிஸ்வரன், 24, என்பரை வலது கையில் வெட்டி, மொபைல் போனை பறித்தனர்.ஒரே நாளில், அடுத்தடுத்து மூன்று பேரை வெட்டி மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட நபர்களால், வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து ஒரகடம் போலீசார் விசாரிக்கின்றனர்.