உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வெளிவட்ட சாலையில் அதிகரிக்கும் முறைகேடுகள் கண்காணிப்பு இல்லாததால் பாதுகாப்பும் கேள்விக்குறி

வெளிவட்ட சாலையில் அதிகரிக்கும் முறைகேடுகள் கண்காணிப்பு இல்லாததால் பாதுகாப்பும் கேள்விக்குறி

ஆவடி, வெளிவட்ட சாலையில் அதிகரிக்கும் முறைகேடுகளால், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் வாகனங்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதற்கு தீர்வு காணவும், விரைவான போக்குவரத்து சேவைக்கும், வண்டலுார் - மீஞ்சூர் இணைக்கும் வகையில், 2,156 கோடி ரூபாய் செலவில், 62 கி.மீ., துாரம் வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டது.சென்னையை ஒட்டியுள்ள இந்த வெளிவட்ட சாலையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள வண்டலுார், தாம்பரம், படப்பை, பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம், மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கின்றன.பிரதானமாக, சென்னை துறைமுகத்திற்கு கனரக வாகனங்கள் வாயிலாக சரக்குகள், விரைந்து எடுத்து செல்ல ஏதுவாக உள்ளது. ஆனால், பல இடங்களில் சாலை மைய தடுப்புகள் அமைக்கப்படவில்லை. அதேபோல, அணுகு சாலையில் தடுப்புகள் அமைக்கப்படாததால், கால்நடைகள் வெளிவட்ட சாலையில் நுழைந்து, விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது.அதுமட்டுமல்லாமல், பல பகுதிகளில் மின் விளக்குகள் எரிவதில்லை. சுங்கச்சாவடி தவிர்த்து முக்கிய சந்திப்புகளில், 'சிசிடிவி' கேமராக்களும் பொருத்தப்படவில்லை. முளைக்கும் கடைகள்வண்டலுார் - மீஞ்சூர் வரை, சுங்கச்சாவடி, முக்கிய சந்திப்பு, அணுகு சாலையோரங்களில், ஹோட்டல்கள், டீக்கடைகள், திருமண மண்டபங்கள், பெட்ரோல் பங்க், சாலையோர டிபன் கடைகள் என, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கனரக வாகனங்கள் உட்பட வாகன ஓட்டிகள் கண்டமேனிக்கு சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.முன்பு நெடுஞ்சாலை போக்குவரத்து ரோந்து வாகன போலீசார் கண்காணித்து, விதிமீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்தனர்.அதற்கு தனியாக இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., போலீசார் என தனித்துறை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், சென்னையில் இருந்து ஆவடி போலீஸ் கமிஷனரகம் பிரிந்த பின், அந்த துறையில் பணியாற்றியவர்கள் அனைவரும் அங்கு சென்றனர்.தற்போது, இந்த துறையில் பணியாற்ற போதிய போலீசார் இல்லாததால், போதிய கண்காணிப்பின்றி போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

பகுதிமக்கள் வலியுறுத்தல்

வண்டலுார் - மீஞ்சூர் இடையே, வரதராஜபுரம், கோலப்பஞ்சேரி, பாலவேடு மற்றும் சின்ன முல்லைவாயில் என, நான்கு சுங்கச்சாவடிகள் உள்ளன.தினமும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள், சுங்கச்சாவடியை கடந்து சென்று வருகின்றன. சுங்கச்சாவடி கட்டணத்தால் சிரமம் அடைந்து வருகிறோம். எனவே, சுற்றுவட்டாரத்தில் 5 கி.மீ., துாரத்தில் உள்ள கிராம மக்கள், சுங்கச்சாவடியை இலவசமாக கடந்து செல்ல 'இலவச அடையாள அட்டை' தர, நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, வெளிவட்ட சாலையில் உள்ள குறைபாடுகளை தெரிவிக்க ' வாட்ஸ் ஆப்' எண்ணும் வெளியிட வேண்டும்.- வரதராஜபுரம் மக்கள்.

பயண நேரம் குறையும்

இது குறித்து, பட்டாபிராமைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சடகோபன், 65, கூறியதாவது:ஆவடி, மாதவரம் மற்றும் புதிதாக திறக்கப்பட உள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையங்களில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் தொலைதுார பேருந்துகள், வெளிவட்ட சாலை வழியாக இயக்க வேண்டும். இதனால், பயண நேரம் குறைவது மட்டுமின்றி, டீசல் செலவும் குறையும். மக்களும் பயனடைவர்.அதுமட்டுமல்லாமல், ஒரகடம், திருமுடிவாக்கம், கும்மிடிப்பூண்டி, மணலி, செங்குன்றம், திருமுல்லைவாயில் பகுதிகளில் தொழிற்பேட்டைகள் இருந்தும், வெளிவட்ட சாலை வழியாகவும், பொது போக்குவரத்து சேவை முழுமையாக துவக்கப்படவில்லை.இதனால், அங்கு அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடைகள், மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கும், காதலர்களின் சில்மிஷ கூடாரமாகவும் மாறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ