டி.பி.எல்., ஹாக்கி போட்டி ஐ.ஓ.பி., அணி அசத்தல்
சென்னை, சென்னையில் நடக்கும் திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி போட்டியில், இந்தியன் வங்கி அணியை 2 - 1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி, ஐ.ஓ.பி., அணி வெற்றி பெற்றது. ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஹாக்கி சங்கம் இணைந்து நடத்தும் திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி போட்டி, எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் லீக் சுற்றில் ஐ.ஓ.பி., அணி, இந்தியன் வங்கி அணியை எதிர்த்துப் போட்டியிட்டது. இதில், ஐ.ஓ.பி., அணி 2 - 1 என்ற கோல் கணக்கில், இந்தியன் வங்கி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐ.ஓ.பி., அணி சார்பில், மனோஜ் குமார் தொடர்ந்து இரண்டு கோல் அடித்து அசத்தினார். இந்தியன் வங்கி சார்பில் அரவிந்த் ஒரு கோல் அடித்து, ஆறுதல் தந்தார். மற்றொரு போட்டியில், ஏ.ஜி.ஓ.ஆர்.சி., அணி, வருமான வரித்துறை அணியை எதிர்த்து மோதியது. இதில், ஏ.ஜி.ஓ.ஆர்.சி அணி 1 - 0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி வீரர் வீரத்தமிழன் ஒரு கோல் அடித்து, அணியின் வெற்றிக்கு உதவினார்.