சுரங்கப்பாதைகளில் போக்குவரத்தை தடுக்க தானியங்கி தடுப்பு அமைக்கும் மாநகராட்சி புதிய தொழில்நுட்பம் என்ற பெயரில் பணம் வீணடிப்பா?
சென்னை, சென்னையில் மழைநீர் தேங்கும் சுரங்கப்பாதைகளில் ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி தடுப்புகள் வாயிலாக போக்குவரத்தை தடை செய்ய, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.சென்னையில் அதிகமாக மழை பெய்யும் நேரங்களில், சாலைகளைவிட சுரங்கப்பாதைகளில் மழைநீர் அதிகளவில் தேங்குவதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள், சில நேரங்களில் ஆழம் தெரியாமல், நீரில் சிக்கிக் கொள்கின்றன.குறிப்பாக, மாநகர பேருந்துகள் அவ்வப்போது, சுரங்கப்பாதை நீரில் சிக்கி பழுதாகி நின்று விடுகின்றன. மழைநீர் வடியும் வரை, அந்த சுரங்கப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது.இதனால், சுரங்கப்பாதையில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு, மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, மழைக்காலங்களில் கண்காணிக்கப்படுகிறது.இந்நிலையில், சென்னையில் உள்ள, 12 ஒற்றை வழிப்பாதை, 5 இரட்டை பாதை சுரங்கப்பாதைகளில், தானியங்கி சாலை தடுப்புகளை அமைக்க, மாநகராட்சி மழைநீர் வடிகால் துறை திட்டமிட்டு உள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில், 17 சுரங்கப்பாதைகள் தண்ணீர் தேங்கும் இடங்களாக, அடையாளம் காணப்பட்டு உள்ளன.இந்த சுரங்கப்பாதைகளில் மழைநீர் அளவு உயரும்போது, தானாக கண்டறிய சுரங்கப்பாதை அணுகல் கட்டுப்பாட்டு அமைப்பு வடிவமைக்கப்பட்டு உள்ளது.இவை, மழைநீர் குறிப்பிட்ட அளவு உயரும்போது, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் தானியங்கி தடுப்பை ஏற்படுத்தி, அந்த சுரங்கப்பாதை வழியே வாகன போக்குவரத்து தடுக்கப்படும்.இதற்காக, செயற்கை நுண்ணறிவுடன், நீர்நிலைகளை நிகழ்நேர கண்காணிப்புக்கு, 'இன்டர்நெட் ஆப் திங்ஸ்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.வெள்ள நீர் வடிந்தவுடன், தடுப்புகள் தானாக அகற்றிக்கொள்ளும். மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட மொபைல் போன் செயலி, அவசர நிலைகளின்போது தடுப்புகளை நேரடியாக அதிகாரிகள் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. டிஜிட்டல் செய்தி பலகைகள், நீரின் அளவு குறித்த தகவல், தமிழ் மற்றும் ஆங்கில மொழி குரல் அறிவிப்பில் வெளியிடும் வகையிலான, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.மோசமான வானிலையின்போது, பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கவும், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சுரங்கப்பாதையின் நிலையை தெரியப்படுத்தவும், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு, 92.99 லட்சம் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.புதிய தொழில்நுட்பம் என்ற பெயரில், மாநகராட்சி பணம் வீணடிக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.