திருவொற்றியூர், திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடைஅம்மன் கோவிலில், மாசி பிரம்மோற்சவ விழா, 15ம் தேதி துவங்கி விமரிசையாக நடந்து வருகிறது.திருத்தேரோட்டம் 21ம் தேதி நடைபெற்றது. மற்றொரு முக்கிய நிகழ்வான, கல்யாண சுந்தரர் - திரிபுர சுந்தரி திருக்கல்யாணம், நேற்று காலை நடந்தது.பல வண்ண மலர்கள், பழங்களால் அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தில், கல்யாண சுந்தரர் - திரிபுர சுந்தரி தாயார் எழுந்தருளினர். அதன்பின், மஹா யாகம் வளர்க்கப்பட்டு, காப்பு மற்றும் பூணுால் அணிவிக்கப்பட்டது.தொடர்ந்து, கல்யாண சுந்தரர் வெண்பட்டு அணிந்தும், திரிபுர சுந்தரி தாயார் வெளிர் பச்சைப்பட்டு உடுத்தியும் மண்டபத்தில் அமர, திருக்கல்யாணம் நடந்தது.பக்தர்களால் களைகட்டிய திருக்கல்யாண நிகழ்வில், பெண்கள், தாலி கயிறு, குங்குமம், பிஸ்கட், சாக்லெட் உள்ளிட்ட இனிப்பு வகைகளை பரிமாறிக் கொண்டனர். கோவிலைச் சுற்றிலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து, மாலையில், 63 நாயன்மார்கள் உற்சவம், இரவு, மகிழடி சேவை உள்ளிட்டவை நடந்தன. இன்று காலை, கடலாடு தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.