ரயிலில் இருந்து தவறி விழுந்து காஞ்சி மாணவர் உயிரிழப்பு
தாம்பரம் காஞ்சிபுரம் அடுத்த ஆர்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்வா, 20. இவர், மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.ஏ., கிரிமினாலஜி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.இவர், நேற்று காலை திருமால்பூர் - சென்னை கடற்கரை நிலையம் இடையே சென்ற புறநகர் விரைவு ரயிலில், கல்லுாரிக்கு சென்றார்.ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பெருங்களத்துார் - தாம்பரம் இடையே ரயில் வந்தபோது, ரயிலில் இருந்து தவறி விழுந்த விஷ்வா, தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.