ரூ.8 கோடியை வீணடித்தது கும்டா சாதாரண யு.பி.ஐ., பயன்படுத்த முடிவு
சென்னை:சென்னையில் பேருந்து , ரயில், மெட்ரோ பயணச் சீட்டுகளை, கியூ.ஆர்., முறையில் பெற வசதியாக, 8 கோடி ரூபாயை செலவிட்டு மென்பொருள் தயாரித்த போக்குவரத்து குழுமமான கும்டா, தற்போது மாற்று வழியாக, 'யு.பி.ஐ.,' முறையில் கட்டணம் செலுத்துவதற்கான புதிய செயலியை உருவாக்கி வருகிறது. சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகிய சேவைகளுடன், கால் டாக்சிகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவைகளுக்கு வெவ்வேறு முறையில் கட்டணம் செலுத்துவதால், பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வாக, க்யூ.ஆர்., முறையில் டிக்கெட் வழங்குவதற்கான புதிய செயலியை, 8 கோடி ரூபாயில், தனியார் நிறுவனம் வாயிலாக, 'கும்டா' உருவாக்கியது. இதில், பராமரிப்பு செலவுக்கான தொகை வசூலிப்பது, பராமரிப்புக்கான கூடுதல் செலவை யார் ஏற்பது என்பதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால், இதற்கான சாப்ட்வேர் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாற்று வழியாக இன்னொரு செயலியை உருவாக்கும் பணிகளில், கும்டா ஈடுபட்டுள்ளது. ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்துவதற்கான ஆன்லைன் தளமான, யு.பி.ஐ., அடிப்படையில், 'ஜிபே, போன்பே' போன்ற வழிமுறைகளை மக்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். இதை அடிப்படையாக வைத்து, 'கும்டா யு.பி.ஐ.,' என்ற பெயரில், புதிய செயலியை உருவாக்க, கும்டா திட்டமிட்டுள்ளது. இதில், மக்கள் எவ்வித சிரமமும் இன்றி, அனைத்து வகையான போக்குவரத்து சேவைகளுக்கும் பயணச்சீட்டுகளை பெறலாம். இதற்கான வரைவு திட்ட அறிக்கை, அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு ள்ளது. இந்த செயலியை பயன்படுத்த, நடைமுறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். விரைவில் மாநகர போக்குவரத்து கழகம், தெற்கு ரயில்வே, சென்னை மெட்ரோ ரயில், கால் டாக்சி நிறுவனங்களின் கருத்துகள் பெறப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.