50 சதவீத மானியத்தில்புல் வெட்டும் இயந்திரம்
சென்னை:'புல் வெட்டும் இயந்திரத்தை, 50 சதவீத மானியத்தில் பெற விரும்புவோர், கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்கலாம்' என, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: தமிழக அரசின், மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு தீவனம் மற்றும் அதற்கான உபகரணங்கள்வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், கால்நடை தீவனத்தை அறுவடை செய்ய, 'புல் வெட்டும் இயந்திரம்' வழங்கப்படுகிறது. இதன் விலை, 29,000 ரூபாய். இந்த இயந்திரம், 50 சதவீத மானியத்தில், 14,500 ரூபாய்க்கு, மாநிலம் முழுதும், 3,000 பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக, 4.8 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைப்பெற விரும்புவோர், குறைந்தபட்சம் இரண்டு மாடுகள் அல்லது, 20 ஆடுகள்; மின்சார வசதியுடன் கூடிய கால் ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள், அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை அல்லது மருந்தகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.