வைகாசி விசாக பிரம்மோத்சவ விழா நாக வாகனத்தில் அருள்பாலித்த முருகன்
சென்னை :சென்னை வடபழனி முருகப் பெருமான் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோத்சவ விழாவில், நேற்று நாக வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சென்னை, வடபழனி முருகன் கோவிலில், இந்த ஆண்டிற்கான பிரம்மோத்சவ கொடியேற்றம், கடந்த 31ம் தேதி நடந்தது. அதை தொடர்ந்து வரும் 10ம் தேதி வரை, தினமும் காலை 7:00 மணிக்கு மங்களகிரி விமான புறப்பாடு நடக்கிறது.விழாவின் நான்காம் நாளான நேற்று இரவு, நாக வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், நாளை இரவு யானை வாகன புறப்பாடும் நடக்கிறது.பிரம்மோத்சவத்தின் பிரதான நாளான வரும் 6ம் தேதி காலை, தேர் திருவிழா நடக்கிறது. அன்று, காலை 5:00 மணி முதல், 6;20 மணிக்குள் தேர் பக்தர்களால் வடம் பிடிக்கப்படுகிறது. இரவு ஒய்யாளி உற்சவம் நடக்கிறது.வரும் 7ம் தேதி இரவு, குதிரை வாகன புறப்பாடு நடக்கிறது. வரும் 8ம் தேதி இரவு 7:00 மணிக்கு வடபழனி முருகன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.வைகாசி விசாகமான 9ம் தேதி, காலை 9:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகர் விதியுலா நடக்கிறது.காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், கலசாபிஷேகமும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில் வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.