உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மடிப்பாக்கம் சாலை விரிவாக்கம் கிடப்பில்; அத்துமீறும் வாகனங்களால் அடிக்கடி அவதி

மடிப்பாக்கம் சாலை விரிவாக்கம் கிடப்பில்; அத்துமீறும் வாகனங்களால் அடிக்கடி அவதி

மடிப்பாக்கம் : பெருங்குடி மண்டலத்தில், மடிப்பாக்கம் வளர்ச்சி அடைந்த பகுதி. 20 ஆண்டுகளாக, மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.இப்பகுதியில் நடந்து வரும் குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்கள், முடியும் நிலையில் உள்ளன. மெட்ரோ ரயில்வே திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பகுதியினருக்கு வசதியாக, வேளச்சேரி -- தாம்பரம் சாலையில் இருந்து, பரங்கிமலை -- மேடவாக்கம் பிரதான சாலைக்கு செல்ல, பிரதான வழித்தடம் உள்ளது.இது, பஜார் சாலை, மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் சபரி சாலை வழியாக செல்கிறது.மாநகர போக்குவரத்தின் பிரதான சாலையாக விளங்கும் இச்சாலையில், அரசு பேருந்துகள், கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இவற்றால் ஏற்படும் நெரிசலை சமாளிக்க, 15 ஆண்டுகளுக்கு முன், மீடியன் வசதியுடன் நான்கு வழிப்பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டது.கைவேலி கூட்டுசாலையில் இருந்து பாலையா கார்டன் வரை, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சில இடங்களில், மீடியன் அமைக்காமல், சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால், மடிப்பாக்கத்தில் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:மடிப்பாக்கம் பஜார் சாலையில், குறிப்பிட்ட பகுதியில் பிரமாண்ட உணவகம், 'டாஸ்மாக்' கடை, தனியார் பயிற்சி நிலையம், காஸ் நிரப்பும் பங்க் ஆகியவை அடுத்தடுத்து உள்ளன.அங்கு வரும் வாகனங்கள், சாலையிலேயே நிறுத்தப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும், ராம்நகர் பகுதியில் நான்கு முனை சந்திப்பு உள்ளது. அங்கு, நகரில் இருந்து வெளியே வரும் வாகனங்கள், தங்கள் இஷ்டத்திற்கு திரும்பி செல்வதாலும், அடிக்கடி வாகனங்கள் அணிவகுத்து விடுகின்றன. அதேபோல, பொன்னியம்மன் கோவில் சந்திப்பிலும் இந்த பிரச்னை உள்ளது.வரும் நாட்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால், போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வாக, வேளச்சேரி -- தாம்பரம் சாலையில் இருந்து, பரங்கிமலை - மேடவாக்கம் சாலை வரை, மடிப்பாக்கம் பிரதான சாலையை முற்றிலும் நான்கு வழிப்பாதையாக மீடியன் வசதியுடன் விரிவாக்கம் செய்ய வேண்டும்.தற்போது, பஜார் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதிக்க வேண்டும்.ராம்நகர் சந்திப்பில் சிக்னல் அமைக்க வேண்டும். அதுவரை, போலீசாரை நியமித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை