உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மூலதன நிதியில் எடுத்தது ரூ.45 கோடிதான்: சென்னை பல்கலை பதிவாளர் விளக்கம்

 மூலதன நிதியில் எடுத்தது ரூ.45 கோடிதான்: சென்னை பல்கலை பதிவாளர் விளக்கம்

சென்னை: 'மூலதன நிதியில் இருந்து, 45.60 கோடி ரூபாய் மட்டுமே எடுத்து செலவு செய்யப்பட்டுள்ளது' என, சென்னை பல்கலை பதிவாளர் ரீட்டாஜான் விளக்கம் அளித்துள்ளார். சென்னை பல்கலையில் மூலதன நிதி எடுத்து பயன்படுத்தப்பட்டது குறித்து, நம் நாளிதழில் நேற்று முன்தினம் வெளியான செய்திக்கு அவர் அளித்துள்ள விளக்கம்: சென்னை பல்கலையில் பணியாற்றி, 2015 முதல் 2025 வரை ஓய்வுபெற்றோருக்கான நிலுவைத்தொகை, 95.44 கோடி ரூபாயாக இருந்தது. அதில், 52 கோடி ரூபாய் வழங்கப் பட்டுவிட்டது. இந்நிலையில், 2007ல், 150 கோடி ரூபாய் வைப்பு நிதியுடன், சென்னை பல்கலையில் உருவாக்கப்பட்ட மூலதன தொகை, 2025ல், 318.85 கோடி ரூபாயாக இருந்தது. அதன் வட்டித்தொகையில் இருந்து இதுவரை ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட்ட நிலையில், நிலுவையில் இருந்த தொகையை, மூலதன நிதியில் இருந்து வழங்க, கடந்த நவ., 28ல் நடந்த ஆட்சிமன்ற குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி, பல்கலை விதிகளுக்கு உட்பட்டு, நிலுவை ஓய்வூதியம், பணிக்கொடை, ஈட்டிய விடுப்பு ஒப்பளிப்பு ஆகியவற்றை வழங்க, மூலதன தொகுப்பு நிதியின், முதிர்ச்சி அடைந்த வைப்பு நிதியில் இருந்து, 45.60 கோடி ரூபாய் மட்டுமே எடுத்து செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதிய முன்பணமாக. 38 கோடி ரூபாய் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு ரீட்டாஜான் தெரிவித்துள்ளார்.

பிழைகளுடன் வெளியான அவசர அறிக்கை

சென்னை பல்கலை பதிவாளர் அனுப்பிய அறிக்கையில், எழுத்து பிழைகளும், ஒருமை, பன்மை பிழைகளும் அதிகம் உள்ளன. பல வாக்கியங்கள், முற்றுப்பெறாமல் தொக்கி நின்றன. பிழைகளில் சில: 'உண்மைக்கு புறப்பான' என்ற தொடருக்குப்பின் 'தவறான' என்ற வார்த்தை வந்துள்ளது. ஆனால், இரண்டும் ஒரே அர்த்தம் பொதிந்தவை. 'ஆராய்ச்சிக் கட்டுரைகள் பரிசு களை பெற்றுள்ளது; ஆய்வறிக்கை கள் தரவரிசையில் முன்னிலை பெற்று பரிசுகளை வென்றுள்ளது' என்ற வாக்கியங்கள் உள்ளன. 'கட்டுரைகள்' என்ற சொல், பன்மையைக் குறிப்பதால், அந்த வாக்கியத்தை 'பெற்றுள்ளன' என, முடிந்திருக்க வேண்டும். 'மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்டம், பட்டைய சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது' என்ற வாக்கியத்தில், மதிப்பெண் 'சான்றிதழ்கள்' மற்றும் பட்டம், 'பட்டய' சான்றிதழ்கள்' என்ற வார்த்தைகள் இடம்பெறுவதுடன், வழங்கப்பட்டு வருகின்றன' என, முடித்திருக்க வேண்டும். 'சுமார் 52 கோடி அளிவிற்கு நிலுவை ஓய்யுதியம், பணிக்கொடை மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்பளிப்பு ஆகியவை ஓய்வுதியர்களுக்கான வழங்கப்பட்டுள்ளது' என்ற வாக்கியம் உள்ளது. இதில், 52 கோடிக்கு முன்போ, பின்போ 'ரூபாய்' வந்திருக்க வேண்டும். 'ஓய்யுதியம்' என்பதற்குப்பதில், 'ஓய்வூதியம்' என்று இடம்பெற்றிருக்க வேண்டும். 'ஆகியவை' என்ற சொல் பன்மையைக் குறிப்பதால், 'வழங்கப்பட்டுள்ளன' என, முடித்திருக்க வேண்டும். 'நிருபர், எந்தவித ஆதரமோ அல்லது பல்கலை நிர்வாகத்திடம் உண்மை நிலை குறித்த கருத்து கேட்காமல் தவறான தகவல்களை அளித்துள்ளனர்' என்ற வாக்கியம் வந்துள்ளது. இதில், 'ஆதாரமோ' எனவும், இணைப்பு வாக்கியத்தில் 'கருத்தோ' எனவும் வந்திருக்க வேண்டும். 'நிருபர்' என்பது ஒருமையைக் குறிப்பதால், 'அளித்துள்ளார்' என முடித்திருக்க வேண்டும். 'ஓய்வூதியர்களுக்கு வழங்குவதற்காக' என்பதற்குப்பதில், 'வழங்கங்குவதற்காக' என்ற சொல் வந்துள்ளது. உண்மை 'இவ்வாறிருக்க' என்பதற்குப்பதில், 'இவ்வாறுறுக்க' என தவறான சொற்கள் இடம்பெற்றுள்ளன. இதுபோல் நிறைய தவறுகளுடன் அந்த அறிக்கை வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !