உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இ.சி.ஆரில் 15 குளங்கள் ஆக்கிரமிப்பு மாயம்! கோர்ட் உத்தரவிட்டும் மீட்பதில் அலட்சியம்

இ.சி.ஆரில் 15 குளங்கள் ஆக்கிரமிப்பு மாயம்! கோர்ட் உத்தரவிட்டும் மீட்பதில் அலட்சியம்

இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலையில், ஈஞ்சம்பாக்கத்தில் 27 குளங்களில் 15 குளங்கள் மாயமாகி இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாயமான 18.57 ஏக்கர் பரப்பிலான 15 குளங்களை மீட்டெடுக்க, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அதிகாரிகளின் அலட்சியமே நீர்நிலைகள் கபளீகரம் செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என, குற்றச்சாட்டும் வலுத்துள்ளது.சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, ஒவ்வொரு மண்டலத்திலும் நுாற்றுக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்தன. அவற்றில் பல ஆக்கிரமிப்புகளால் மாயமாகின.கடந்த 2015ல் பெய்த பேய்மழையின் போது பெருக்கெடுத்த வெள்ளம், பல நீர்வழித்தடங்களை அடையாளம் காட்டியது. இதையடுத்து, சென்னையில் கபளீகரம் செய்யப்பட்ட நீர்நிலைகளை மீட்டெடுக்க நீர்நிலை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

கோர்ட் உத்தரவு

நீர்நிலைகளை மீட்டெடுக்க, ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் அரசால் ஒதுக்கப்படுகிறது. ஆனால், செயல்படுத்துவதில் மந்தநிலை தொடர்கிறது. ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள ஏரி, குளங்களை மீட்டெடுக்க, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளும், அதிகாரிகளின் அலட்சியத்தால் அமல்படுத்தப்படாமல் உள்ளன. விரிவாக்க மண்டலங்களை பொறுத்தவரை, ஒவ்வொரு வார்டிலும், 15 முதல் 30 நீர்நிலைகள் உள்ளன. இதை மீட்டெடுத்தால் அப்பகுதிகளில் நிலத்தடிநீர் உயர வழி ஏற்படும்.குளங்களை மீட்டெடுக்க, 2019ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, எட்டு துறைகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.ஆய்வின் அடிப்படையில், 'மாயமான குளங்களை வருவாய்த்துறை மீட்டெடுத்து, மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். பாதி ஆக்கிரமிப்பில் உள்ள குளங்களை, வருவாய்த்துறை உதவியுடன் மாநகராட்சி மீட்டெடுக்க வேண்டும். மாநகராட்சி வசம் உள்ள குளங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால் அதை அகற்றி, வருவாய் ஆவண அடிப்படையில் சுற்றி தடுப்பு அமைத்து பாதுகாக்க வேண்டும்' என முடிவு செய்யப்பட்டது.இந்த உத்தரவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

520 ஆக்கிரமிப்பு வீடுகள்

அந்தவகையில், சோழிங்கநல்லுார் மண்டலம் 194வது வார்டு, இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தில் 27 குளங்கள் உள்ளன. இதில், ஒன்பது குளங்கள் மாநகராட்சி வசம் உள்ளன. இதில், சில குளக்கரைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன.தனியார் சுற்றுச்சுவர், கட்டடங்கள், வீடு, கடைகள் என, பாதி ஆக்கிரமிப்பில் மூன்று குளங்கள் உள்ளன. மீதமுள்ள, 15 குளங்கள் இருந்த தடமே தெரியாமல் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதில், 520 வீடு, கடைகள் உள்ளன.'நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, ஐந்து ஆண்டுகள் ஆகியும், மாயமான குளங்களை மீட்டெடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை' என, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.இது குறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:சோழிங்கநல்லுார் மண்டலம் 194வது வார்டை பொறுத்தவரையில் 285 தெருக்கள் உள்ளன. 9,000 வீடுகளில் 35,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இங்கு வசிப்போரின் தண்ணீர் தேவையை, நிலத்தடியில் இருந்து பெற முடியும். இதற்கு, குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்த, 15 மாயமான குளங்களை மீட்டெடுத்து பராமரிக்க வேண்டும். குளங்கள் உயிர்ப்போடு இருந்தால், நிலத்தடிநீர் அதிகரிக்கும். நீதிமன்றம் உத்தரவிட்ட குளங்களை மீட்டெடுக்க, வருவாய்த்துறை, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். மழைநீரை சேமித்து வைக்க, மாயமான குளங்களை மீட்டெடுக்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டும், வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். குளத்தில் கட்டும் வீடு, கடைகளை அகற்றாமல், ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக செயல்படுகின்றனர். மாற்று வழி இருந்தும், குளங்களில் சாலை போடுவது எந்தவிதத்தில் நியாயம்?- பொன்.தங்கவேல், சமூக ஆர்வலர், இ.சி.ஆர்.,எங்கள் வசம் உள்ள குளங்களில், ஆக்கிரமிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாதி ஆக்கிரமிப்பு தொடர்பாக, வருவாய்த்துறைக்கு கடிதம் எழுதி உள்ளோம். அவர்கள் அளந்து தந்தால், நிதி ஒதுக்கி சீரமைக்க தயாராக உள்ளோம். மாயமான குளங்களை மீட்க, அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்.- -நமது நிருபர்- - - மாநகராட்சி அதிகாரிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி