டாக்டர் போல் நடித்து தில்லாலங்கடி பல லட்சம் ரூபாய் சுருட்டியவர் கைது
அண்ணா நகர்: டாக்டர் போல் நடித்து, அரசு வேலை வாங்கி தறுவதாக கூறி, பலரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஊட்டச்சத்து ஆலோசகர் கைது செய்யப்பட்டார். வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினகுமாரி, 48. இவர், கடந்த 17ம் தேதி, அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்று அளித்தார். புகாரில் அவர் கூறியிருப்பதாவது: யோகாவில் பிஎச்.டி., முடித்துவிட்டு, பயிற்சி அளித்து வந்தேன். கடந்த 2024 டிசம்பரில், முகநுாலில் டாக்டர் சுரேந்தர் என்பவர் உணவியல் சான்றிதழ் படிப்பு தொடர்பாக விளம்பரம் செய்திருந்தார். சம்பந்தப்பட்ட எண்ணில் தொடர்பு கொண்டு, படிப்புக்காக 10,000 ரூபாய் செலுத்தி பயிற்சியை முடித்தேன். பின், சான்றிதழை கேட்டபோது, அதிகாரப்பூர்வமான சான்றிதழ் வழங்க முடியாது எனவும், நேரு விளையாட்டு அரங்கில், யோகா பயிற்றுநர் பணி வாங்கித் தருவதாகவும் கூறி, 3.51 லட்சம் ரூபாய் பெற்றார். அதன்பின் அவர், வேலையும் வாங்கித் தரவில்லை; பணத்தையும் திருப்பி தரவில்லை. இவ்வாறு, புகாரில் கூறியிருந்தார். போலீசார் விசாரித்து, துாத்துக்குடியைச் சேர்ந்த சுரேந்தர், 30, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணைக்கு பின் போலீசார் கூறியதாவது: ஆன்லைனில் ஊட்டச்சத்து ஆலோசகர் படிப்பில் பிஎச்.டி., பட்டம் பெற்ற சுரேந்தர், கடந்த 2018ல் சென்னையில் தனியார் மருத்துவமனை மற்றும் உடற்பயிற்சி நிலையத்தில், ஊட்டச்சத்து ஆலோசகராக பணிபுரிந்துள்ளார். அப்போது, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றுவதாக கூறி, தெரிந்த ஆட்டோ ஓட்டுநரின் உறவினருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக, 5 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளார். பின், அரும்பாக்கத்தில் குடியிருந்த வீட்டு உரிமையாளரிடம், 3 லட்சம் ரூபாயும், அரும்பாக்கத்தைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவரிடம், 13 லட்சம் ரூபாயும் ஏமாற்றி பெற்றுள்ளார். மேலும், கொரோனா காலத்தில், கர்ப்பிணியருக்கு ஆன்லைனில் இலவசமாக ஊட்டச்சத்து ஆலோசனை வழங்கியதோடு, குடும்பத்தினரிடம் அரசு மருத்துவமனையில் பணிபுரிவதாக கூறியுள்ளார். ஒன்றரை ஆண்டுக்கு முன், தன் பெயரை டாக்டர் சுரேந்தர் என மாற்றி, யு - டியூப் சேனலில் ஊட்டச்சத்து அகாடமியை துவங்கியுள்ளார். அதன் வாயிலாக, ரத்தினகுமாரியை ஏமாற்றியது தெரிந்தது. சொந்தமாக வீடு கட்டவும், ஆடம்பரமாக வாழவும் மோசடி செய்ததாக, சுரேந்தர் ஒப்புக்கொண்டார். விசாரணைக்கு பின், நேற்று அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு போலீசார் கூறினர்.