மேயர், கவுன்சிலர் நகர்வலத்தில் மக்கள் சரமாரி கேள்வி
சென்னை, குறைகேட்பு பயணத்தில், மக்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், சென்னை மேயர், கவுன்சிலர்கள், அதிகாரிகள் திணறி வருகின்றனர். சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மக்களிடம் நேரடியாக சென்று, பொதுமக்களின் தேவைகள், புகார் குறித்து கேட்டறியும் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தை, கொளத்துார் தொகுதியில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். தினமும் காலை, 7:00 மணி முதல் 11:00 மணி வரை நடக்கிறது. வரும், 10ம் தேதி வரை இந்த குறைகேட்பு பயணம் தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அடுக்கடுக்கான புகார்
மேயர் பிரியா தலைமையில், அந்தந்த பகுதி கவுன்சிலர், மண்டல குழு தலைவர், அதிகாரிகள் உள்ளிட்டோர், பகுதி வாரியாக மக்களை சந்தித்து, சாலை, தண்ணீர், குப்பை மற்றும் தெரு விளக்கு வசதி குறித்து கேட்டறிகின்றனர். ஆனால், பொதுமக்களோ, பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட அரசின் சமூக நல திட்ட உதவிகள் கிடைக்காதது, நீண்ட கால பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.கொளத்துாரில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் சந்திப்பின்போது, 'பொங்கல் உதவித்தொகை, 1,000 ரூபாய் வழங்காதது ஏன்; மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பம் கொடுத்து, காத்திருக்கிறோம்; எப்போது உரிமை தொகை கிடைக்கும்' என்றெல்லாம், அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.அயனாவரம் பகுதியில், 'கழிவுநீர் பிரச்னை இன்னும் தீரவே இல்லை. எப்போதுதான் எங்களுக்கு விடிவு கிடைக்கும்' என, கேள்வி எழுப்பினர். சில இடங்களில், 'போலீசார் ரோந்து வருவதே இல்லை. இதனால் பல்வேறு குற்றங்கள் நடக்கின்றன. போதைப் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்துங்கள்' என்றும் புகார் தெரிவித்துள்ளனர். தேர்தல் உறுதி
இவ்வாறு திடீரென எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு, மேயர் மற்றும் கவுன்சிலர்களால் சரியான பதில் தர முடியாமல், ஒரு வழியாக சமாளித்து வருகின்றனர்.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:மக்களை சந்தித்து, பிரச்னைகள் இருந்தால் அவற்றை தீர்த்து வைத்து தேர்தலுக்கு தயாராகலாம் என நினைத்து, இத்திட்டத்தில் பலரும் ஆர்வம் காட்டினர். ஆனால், அதுவே அவர்களுக்கு எதிராக திரும்பி வருகிறது.மக்கள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்புவதால், அரசு நிர்வாகத்தின் மீது எந்த அளவுக்கு கோபத்தில் உள்ளனர் என்பது தெரிகிறது. ஒவ்வொரு வார்டிலும், சிறப்பு குறைதீர் முகாம் நடத்தி, நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மக்களை சமாளிக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
'கவுன்சிலரை பார்க்க முடியலை'
''கவுன்சிலர் - மக்களுக்கு இடையே இடைவெளி இருக்கக்கூடாது,'' என, அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தினார். மக்கள் சந்திப்பு பயணம் நேற்று காலை, வில்லிவாக்கத்தில் நடந்தது. சிவன் கோவில் மேற்கு மாடவீதி, அகத்தீஸ்வரர் கோவில் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள், ' 'பலருக்கும் மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய் கிடைக்கவில்லை. சாலையோரத்தில், போக்குவரத்து இடையூறாக உள்ள மின் மாற்றிகளை, பாதிப்பு ஏற்படாத இடங்களுக்கு மாற்ற வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர். மேலும், கவுன்சிலர்களை சந்திக்க முடியவில்லை என்றும் புகார் கூறினர். அப்போது, ''வார்டுகளில் மக்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு இடையே இடைவெளி இருக்கக்கூடாது. தினமும் வார்டுகளில் உள்ள மக்களை சந்தித்து, குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்,'' என, கவுன்சிலர்களுக்கு, அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தினார்.