ஆர்.பி.ஓ.,வை சந்திக்கும் நிகழ்வு பாஸ்போர்ட் ஆபீசில் துவக்கம்
சென்னை, பாஸ்போர்ட் பெறுவது தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களுக்கு, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி விஜயகுமார், நேற்று நேரில் விளக்கம் அளித்தார். பொதுமக்களின் கேள்விகளுக்கு சந்தேகம் அளிக்கும் வகையில், 'உங்கள் ஆர்.பி.ஓ.,வை சந்தியுங்கள்' என்ற நிகழ்ச்சி, சென்னை மண்டல பாஸ் போர்ட் அலுவலகத்தில், செவ்வாய் தோறும் காலை, 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடத்தப்பட உள்ளது. இந்த சந்திப்பின் முதல் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. நேற்றைய நிகழ்ச்சியில், 20 பேர், தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். முக்கியமாக, ஆன்லைன் வாயிலாக நேரடியாக பாஸ்போர்ட் பெறுவது, அதற்கான ஆவணங்களை தயார்படுத்துவது, பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்ப்பது, முகவர்கள் வாயிலாக பாஸ்போர்ட் பெற்றபின் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வழிமுறைகள் குறித்து விளக்கம் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், தங்களின் கேள்விகளை 'rpo.gov.in' என்ற முகவரிக்கு அனுப்பியோ, 044 -- 2851 8848 எண்ணில் தொடர்பு கொண்டோ முன் அனுமதி பெறலாம்.