ரூ.50 நிலுவை இருந்தால் மட்டுமே மெட்ரோ அட்டை மாற்ற அனுமதி
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க, 2023 ஏப்., 14ல், 'சிங்கார சென்னை அட்டை' அறிமுகமானது. இந்த அட்டையில், அனைத்து சேவையும் பெறும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போதுள்ள மெட்ரோ பயண அட்டையை, படிப்படியாக நிறுத்தப்பட உள்ளது.முதற்கட்டமாக, புது வண்ணாரப்பேட்டை, காலடிப்பேட்டை, திருவொற்றியூர், நந்தனம் உட்பட 11 மெட்ரோ ரயில் நிலையங்களில், வரும் ஏப்., 1 முதல் மெட்ரோ பயண அட்டை விற்பனை மற்றும் ரீசார்ஜ் வசதி நிறுத்தப்படுகிறது. எனவே, இந்த அட்டையில் உள்ள தொகையை பயன்படுத்தி கொள்ள நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், மெட்ரோ பயண அட்டையில், 50 ரூபாய் நிலுவை இருந்தால் மட்டுமே, மெட்ரோ ரயில் நிலைய கவுன்டர்களில் கொடுத்து, சிங்கார சென்னை அட்டையை பெற்றுக் கொள்ளலாம்; அதிக தொகை இருந்தால் மாற்ற முடியாது என, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பயணியர் கோரிக்கைமெட்ரோ ரயில் பயணியர் சிலர் கூறியதாவது:சில பயணியரிடம் மெட்ரோ பயண அட்டையில், 1,000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை இருப்பு வைத்துள்ளனர். இந்த தொகையை அடுத்த 14 நாட்களில் முடிக்க முடியாது. எனவே, பயண அட்டையில் உள்ள முழு நிலுவை தொகையும், 'சிங்கார சென்னை அட்டை'க்கு மாற்றும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.