உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓ.எம்.ஆரில் உள்வாங்கும் அணுகு சாலைகள் பராமரிப்பில் அலட்சியம் காட்டும் மெட்ரோ

ஓ.எம்.ஆரில் உள்வாங்கும் அணுகு சாலைகள் பராமரிப்பில் அலட்சியம் காட்டும் மெட்ரோ

சென்னை, ஓ.எம்.ஆரில் டைடல் பார்க் முதல் சிறுசேரி வரை, 20 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. இதற்காக, ஆறு வழி சாலை, நான்கு வழியாக மாற்றப்பட்டது. போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.சாலை மேம்பாட்டு நிறுவனம் கட்டுப்பாட்டில் உள்ள சாலை, மெட்ரோ ரயில் பணிக்காக மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பணி முடிய, இன்னும் மூன்று ஆண்டுகள் வரை ஆகும் சூழல் உள்ளது.அதுவரை, சாலை பராமரிப்பு பணியை மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்ய வேண்டும். ஆனால், சாலை பராமரிப்பில் மெட்ரோ ரயில் ஒப்பந்த நிறுவனங்கள் மெத்தனமாக செயல்படுவதாக, போக்குவரத்து போலீசார் குற்றஞ்சாட்டுகின்றனர்.இருவழி பாதையில் அணுகு சாலை, தலா 15 அடி அகலம் கொண்டது. இலகுரக வாகனங்கள் செல்ல வேண்டிய இந்த அணுகு சாலையில், போக்குவரத்து மாற்றத்தால் கனரக வாகனங்கள் செல்கின்றன.இதில், வடிகால், கேபிள் பாதை, குடிநீர், கழிவுநீர் பாதை உள்ளது. இதற்கான பராமரிப்பு பணிக்காக, இயந்திர நுழைவாயில் திறக்கப்படும். அவை முறையாக மூடப்படாததால், கனரக வாகனங்கள் செல்லும்போது சாலை உள்வாங்கியுள்ளது.சிறிய அளவில் சேதமடைந்த போதே சீரமைக்காததால், பெரிய பள்ளமாக மாறி விட்டது. இந்த வகையில், டைடல் பார்க் முதல் சிறுசேரி வரை, அணுகு சாலையில் 40க்கும் மேற்பட்ட இடங்களில், சாலை உள்வாங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர்.போக்குவரத்து போலீசார் கூறியதாவது:சாலை சீராக இல்லாததால், தினமும் விபத்துகள் நிகழ்கின்றன. பருவமழை துவங்கும் முன், அபாய பள்ளங்களை சீரமைக்க கூறினோம். பெரிய வாகனங்களை பின்தொடர்ந்து செல்லும் பைக், ஆட்டோக்கள், உள்வாங்கிய பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றன.இரவில் விபத்துகள் அதிகரிக்கின்றன. சிறிய விபத்துகள், வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை. காயமடைந்து தானாக சிகிச்சை பெற்று செல்வோர் அதிகம். மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு பலமுறை கடிதம் அனுப்பியும், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பணி முடியும் வரை, மெட்ரோ ரயில் நிர்வாகம் தான் சாலையை சீரமைக்க வேண்டும். நாங்களும் வலியுறுத்தி வருகிறோம்' என்றனர்.மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 'ஓ.எம்.ஆரில் இரண்டு நிறுவனங்கள் பணி செய்கின்றன. சாலையை சீரமைக்க உத்தரவிட்டுள்ளோம். மழையில் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அலட்சியமாக செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ