உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை இருளில் பயணியர் தவிப்பு

 நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை இருளில் பயணியர் தவிப்பு

சென்னை: சென்ட்ரல் -- உயர் நீதிமன்றம் இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் செல்லும் போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு நிறுத்தப்பட்டது. இதனால், பயணியர் அவதிப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு, நேற்று அதிகாலை மெட்ரோ ரயில் சென்று கொண்டிருந்தது. சென்ட்ரல் -- உயர் நீதிமன்றம் இடையே ரயில் வந்தபோது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நின்றது. சுரங்கப்பாதை என்பதால் பயணியர் குழப்பமடைந்தனர். இது தவிர, மின்சாரம் தடைபட்டு ரயிலுக்குள் இருந்த மின் விளக்குகளும் அணைந்தன. சுரங்கப்பாதையில் பயணியர் ரயிலில் சிக்கி, 10 நிமிடத்துக்கு மேல் இருந்த நிலையில், திடீரென மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அறிவிப்பு வெளியானது. அதில், அருகில் உள்ள நீதிமன்றம் நிலையத்துக்கு பயணியர் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, பயத்தில் செய்வதறியாது பயணியர் தவித்தனர். இதையடுத்து, மெட்ரோ ரயிலில் இருந்து இறங்கிய பயணியர் சுரங்கப்பாதையை ஒட்டி, நடைபாதை வழியாக கைப்பிடியை பிடித்து கொண்டே நடந்து சென்றனர். 500 மீட்டர் துாரம் நடந்து சென்று, உயர்நீதிமன்ற மெட்ரோ நிலையத்தை அடைந்தனர். அவசர காலத்தில் பயணியர் சுரங்கப்பாதையில் இருந்து வெளியேவர அமைக்கப்பட்ட வழியாக ஒவ்வொரும் வரிசையாக சென்றனர். சுரங்கப்பாதையில் இருளில் சிக்கிக்கொண்ட பயணியர் வெளியே வந்த பின், நிம்மதி பெருமூச்சு விட்டனர். சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டது இதுவே முதல் முறையாகும். மெட்ரோ விளக்கம் இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: மெட்ரோ ரயிலில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், உயர் நீதிமன்ற நிலையம் -- சென்ட்ரல் நிலையங்களுக்கு இடையே நிறுத்தப்பட்டது. உடனடியாக பயணியர் வெளியேற்றப்பட்டு, தொழில்நுட்ப கோளாறும் சரி செய்யப்பட்டது. தொடர்ந்து, காலை 6:20 மணி முதல் மெட்ரோ ரயில் வழக்கம் போல இயங்கப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை