குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்
போரூர், 'குளத்தில் கூட தாமரை வளரக் கூடாது' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசினார்.சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பில், போரூர் செட்டியார் அகரம் பகுதியில், 16.60 ஏக்கர் பரப்பளவில், 12.60 கோடி ரூபாய் மதிப்பில், ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.இந்த பூங்காவில் 103 இருக்கைகள், நடைபாதை, அனைத்து வகையான விளையாட்டு மைதானம், 6.85 ஏக்கர் அளவில் ஏரி, திறந்தவெளி உடற்பயிற்சி மைதானம், பார்க்கிங் மற்றும் கழிப்பறை வசதி, கடைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இப்பூங்கா பணியை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான சேகர்பாபு, நேற்று காலை ஆய்வு செய்தார். அங்கிருந்த அதிகாரிகளிடம், இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்தும், எப்போது பணிகள் நிறைவு பெறும் என்பது குறித்தும் கேட்டறிந்தார். அப்போது, அங்கிருந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் தாமரைப் பூ இருந்ததை கண்டு, 'தாமரை வளரவே கூடாது' என, அதிகாரிகளிடம் நையாண்டியாக தெரிவித்தார். மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி, வீட்டு வசதி துறை முதன்மை செயலர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.