மாயமான 8 வயது சிறுமி 4 நாட்களுக்கு பின் மீட்பு
சென்னை, சென்னை, ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த, 35 வயது மதிக்கத்தக்க பெண், தன் எட்டு வயது மகள் மாயமானதாக, நான்கு நாட்களுக்கு முன் ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தனிப்படைகள் அமைத்து குழந்தையை தேடி வந்தனர். 100க்கும் மேற்பட்ட 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆராய்ந்த நிலையில், சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து, நான்கு நாட்களுக்குப் பின் நேற்று, சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். போலீசார், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின், திருமங்கலம் மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பின் சிறுமி, பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.