| ADDED : நவ 17, 2025 03:24 AM
சென்னை: 'ஒளிரும் தெரு பெயர் பலகைகள்' என்ற பெயரில், பல ஆயிரம் ரூபாய் 'கணக்கு' காண்பித்து அமைக்கப்பட்ட பலகைகள் இன்று பல இடங்களில், எலும்புக்கூடாக மாறி உள்ளன. சென்னை மாநகராட்சி முழுதும், எழுத்துக்கள் ஒளிரும் தன்மை கொண்ட துருப்பிடிக்காத இரும்பால் செய்யப்படும் தெரு பெயர் பலகை, அனைத்து தெருக்களிலும் வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி முழுதும், தெரு பெயர் பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த தெரு பெயர் பலகை ஒன்று அமைக்க, 25,000 முதல் 27,000 ரூபாய் வரை செலவாகிறது. இதில், திருவொற்றியூர் மண்டலத்தில், கவுன்சிலர்களின் பெயரும் தனிப்பலகையில் இடம் பெறுவதால், கூடுதல் செலவு ஏற்படுகிறது. பெரும்பாலான, ஒளிரும் தெரு பெயர் பலகைகள் இன்று எலும்புக்கூடாக மாறியுள்ளன. சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, மறைக்கப்பட்டுள்ளன. இதனால், தெரு பெயர் தெரியாமல் முகவரி தேடி அலையும் அவலம் ஏற்படுகிறது. வரும் நாட்களில், சேதமடைந்த தெரு பெயர் பலகைகளின் கணக்கை காட்டி மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல், ரயில் நிலையங்களில் இருப்பது போன்று நிரந்தர பெயர் பலகைகள் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.