27 கி.மீ., தேர்வாய் கண்டிகை சாலையில் மரண பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தவிப்பு
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா தேர்வாய் கண்டிகை 'சிப்காட்' வளாகம், 2010ம் ஆண்டு, 1,127 ஏக்கர் பரப்பில் துவங்கப்பட்டது.மிஷ்லின் டயர், பிலிப்ஸ் கார்பன், பேட்டர் இந்தியா, சுந்தரம் க்ளேட்டன், வீல்ஸ் இந்தியா, பிரேக்ஸ் இந்தியா உட்பட மொத்தம், 46 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு கன்டெய்னர் லாரிகள் உட்பட தினசரி, 400 கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. தவிர, நுாற்றுக்கணக்கான கார், வேன், பேருந்துகளில் தொழிலாளர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். அபாயம்
அனைத்து வகை வாகனங்களும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து, தேர்வாய் கண்டிகை சிப்காட் வளாகத்திற்கு வந்து செல்கின்றன.அந்த வாகனங்கள், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலையில் இருந்து கன்னிகைபேர், பெரியபாளையம், தண்டலம் வழியாக தேர்வாய்கண்டிகை சிப்காட் வரையிலான, 27.4 கி.மீ., சாலையை கடந்து வர வேண்டும். இடைப்பட்ட சாலையில் உள்ள மரண பள்ளங்கள், வாகன போக்குவரத்தை ஆட்டம் காண செய்கின்றன.ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலையில் துவங்கி தேர்வாய்கண்டிகை சிப்காட் வளைவு அமைந்துள்ள சூளைமேனி வரையிலான சாலையில், திடீர் பள்ளங்கள் அதிக அளவில் உள்ளன.அந்த சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் கலகலத்து போகும் அளவிற்கு, சாலை பள்ளங்கள் மிரட்டுகின்றன.அதிக பாரம் உடைய கனரக வாகனங்களின் அச்சு முறிந்து போகும் அளவுக்கு, சாலை மிக மோசமாக உள்ளதால், அச்சத்துடன் பயணிப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். தொழில் பாதிப்பு
தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு சாலை வசதி முக்கிய பங்கு வகிப்பதால், தேர்வாய் கண்டிகை சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. தொழிற்சாலைகளின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தொழிற்சாலை நிர்வாகி ஒருவர் கூறியதாவது:போக்குவரத்து பாதிப்பால், உரிய நேரத்தில் தொழிலாளர்கள், ஊழியர்கள் வேலைக்கு வர முடியாத நிலை ஏற்படுகிறது. உரிய நேரத்தில் உற்பத்தி பொருட்கள் அனுப்ப முடியாமலும், மூலப்பொருட்கள் கிடைக்க பெறாமலும் தவித்து வருகிறோம். இதனால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.தமிழக அரசு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டு தொழில் வர்த்தக பிரதிநிதிகளும் தமிழகம் வந்து செல்கின்றனர்.இந்த சூழலில், சிப்காட் தொழில் வளாகம் செல்லவே, சாலை இப்படி மோசமாக இருந்தால், வெளிநாட்டு முதலீடுகள் எப்படி வரும். இந்த சாலையை மேம்படுத்த, அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். ரூ.32 கோடி ஒதுக்கீடு
தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் ரவீந்திரராவ் கூறுகையில், ''ஜனப்பன்சத்திரம் முதல், ஊத்துக்கோட்டை வரையிலான, 32 கி.மீ., சாலை, 32 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது.''இதற்கு டெண்டர் விடப்பட்ட நிலையில், விரைவில் பணி ஆணை வழங்கப்பட உள்ளது. இம்மாத இறுதியில் பணிகள் துவங்கப்பட்டு விரைந்து முடிக்கப்படும்,'' என, தெரிவித்தார்.