கண்டமாகி ஓடும் 200 பஸ்கள் ஓய்வளிக்க எம்.டி.சி., திட்டம்
சென்னை :கண்டமான நிலையில் ஓடும் 200 பேருந்துகளை, இந்தமாத இறுதிக்குள் சேவையில் இருந்து விடுவிக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: மாநகர போக்குவரத்து கழகத்திற்கு, சமீபத்தில், 255 மின்சார பேருந்துகள் சேவை துவங்கியுள்ளது. புதிய பேருந்துகள் வர வர பழைய பேருந்துகளை நீக்கி விடுகிறோம். அடுத்தகட்டமாக, டீசலில் ஓடும் 200 புதிய பேருந்துகளை, 10 நாட்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளோம். இதற்கிடையே, எம்.டி.சி.,யில், 15 ஆண்டுகளை கடந்து ஓடும் பழைய 200 பேருந்துகள் இந்த மாத இறுதிக்குள் சேவையில் இருந்து நீக்கப்படும். மாற்றாக புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.