உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முடிச்சூர் மேம்பால அணுகு சாலை திட்டம்... கிணற்றில் போட்ட கல்!16 ஆண்டு இழுபறியால் தாம்பரத்தில் தவிப்பு

முடிச்சூர் மேம்பால அணுகு சாலை திட்டம்... கிணற்றில் போட்ட கல்!16 ஆண்டு இழுபறியால் தாம்பரத்தில் தவிப்பு

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியாக மேம்பட்டுள்ள நிலையில், 78 கோடி ரூபாய் மதிப்பிலான தாம்பரம் - முடிச்சூர் சாலை மேம்பால திட்டத்தில், 16 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட அணுகு சாலை பணிகளை முடிக்காமல் அரசு பாதியில் நிறுத்திவிட்டது. பாதுகாப்புத்துறை இடத்தை கையகப்படுத்துவதில் சாதுர்யமாக செயல்படாததால், சாலை அமைக்க வேண்டிய நிலப்பகுதி ஆக்கிரமிப்பில் சிக்கி, நெரிசலால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தாம்பரத்தில் ரயில் நிலையம் தவிர, அதை சுற்றியுள்ள எந்த ஒரு பகுதியிலும், வாகனங்களை நிறுத்த தனி இடமோ, நிறுத்தமோ இல்லை. இங்கு வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் நிறைந்த மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையிலும், தனி வாகன நிறுத்தங்கள் இல்லாததால், சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.அதேபோல், நகரின் பிரதான சாலைகளான ராஜாஜி, காந்தி, கக்கன் தெருக்கள், முடிச்சூர் ஆகியவற்றை இணைக்கும் உட்புற சாலைகளிலும், சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்துவதால், நெரிசல், இட நெருக்கடி ஏற்படுகிறது. தவிர, சாலையோர ஆக்கிரமிப்புகளும் உள்ளன.மேலும், தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு, குறிப்பிட்ட இடம் இல்லாததால், ஜி.எஸ்.டி., சாலை ஓரத்தில், ரயில் நிலையம் எதிரில் துவங்கி, காந்தி சாலை வரை, மாநகர பேருந்துகள் அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன. இதனால், ரயில், பேருந்து நிலையத்தில் இருந்து வருவோர் ஜி.எஸ்.டி., சாலையை கடக்க படாதபாடு படுகின்றனர்.தாம்பரத்தில் நிலவும் நெரிசலை தீர்க்க, 'மல்டி லெவல்' அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டப்படும் என, நகராட்சியாக இருந்தபோதே அறிவிக்கப்பட்டது. இன்று வரை அத்திட்டம் கிடப்பிலேயே உள்ளது.இதனால், நாளுக்கு நாள் அதிகரிக்கும் நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.அதேபோல், தாம்பரம் - முடிச்சூர் சாலை மார்க்கமாக, 78 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மேம்பாலத்தின் கீழ், ஒரு புறத்தில் அணுகு சாலை போடப்பட்டுள்ளது. இந்து மிஷன் மருத்துவமனை சுற்றுச்சுவரை ஒட்டிய மற்றொரு பகுதியில், நடுவில் சில மீட்டர் துாரத்திற்கு மட்டுமே அணுகு சாலை போடப்பட்டுள்ளது.அப்பகுதியில் 200 அடி துாரத்திற்கு அணுகு சாலை அமைக்கப்படாமல், 16 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகிறது. இதனால் அந்த இடம் முழுக்க முழுக்க தனியார் வாகனங்களின் கட்டுப்பாட்டில் சிக்கி, அங்குள்ள குடியிருப்புவாசிகள், ஒவ்வொரு நாளும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.முடிச்சூர் சாலை குடியிருப்போர் நலச்சங்க தலைவர் வி.ரிக்கப் சந்த், 62, கூறியதாவது:தாம்பரம் மேம்பாலம் அமைக்கும்போது, முடிச்சூர் சாலையில் இருபுறமும் அணுகு சாலை அமைக்கப்படும் என, நிலங்களை கையகப்படுத்தினர். ஆனால் ஒரு புறம் மட்டும் அணுகுசாலை அமைத்துள்ளனர்.மற்றொரு பகுதியில், பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிலத்தை பெற்று, அதில் அணுகு சாலை அமைக்க வேண்டியுள்ளது.அந்த விஷயத்தில், அமைச்சர், எம்.பி., - எம்.எல்.ஏ., - மேயர் என, யாருமே அக்கறை காட்டாததால், அந்த நிலத்தை பெறும் நடவடிக்கை, கிணற்றில் போட்ட கல் போல் அப்படியே கிடக்கிறது. அதனால், அணுகு சாலை அமைக்க முடியாமல், தனியார் வாகனங்கள் நிறுத்தமாகவே மாறியுள்ளது.தவிர, மேம்பாலத்தின் கீழ் பகுதியில், நகராட்சியாக இருந்தபோது, பூ மாலை கடைகளை போடுவதற்கு தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், பூ கடையினர் அதையே நிரந்தரமாக மாற்றி, மேம்பால கீழ்பகுதியை முழுதுமாக ஆக்கிரமித்துள்ளனர்.அந்த இடத்தில், இரவு நேரத்தில் கஞ்சா, மது, மாது என, அனைத்து விதமான குற்றச் செயல்களும் நடக்கின்றன. மாலை கடைகளின் கழிவுகளை அங்கேயே கொட்டி, சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகின்றனர்.குறிப்பாக, அருகேயுள்ள, 'டாஸ்மாக்' கடைக்கு வரும் 'குடி'மகன்கள், போதை தலைக்கேறியதும் சாலையிலேயே படுத்து துாங்குகின்றனர். 'குடி'மகன்கள் தங்கள் வாகனங்களை, அங்குள்ள வீடுகள் முன் இஷ்டத்திற்கு நிறுத்தி, அராஜகம் செய்கின்றனர். இதனால், பெண்கள், மாணவர்கள் வெளியே வரவே அச்சப்படுகின்றனர்.முடிச்சூர் சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதி, ஒட்டுமொத்த குற்றச் செயல்களின் புகலிடமாகவும், தனியார் வாகன நிறுத்துமிடமாகவும் மாறி, தாம்பரத்திற்கே பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

என்ன செய்யலாம்?

* 'மல்டி லெவல்' அடுக்குமாடி வாகன நிறுத்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்* வாகன நிறுத்த வசதி இருந்தால் மட்டுமே, பெரிய கடைகள், நிறுவனங்கள், உணவகங்களுக்கு உரிமம் வழங்க வேண்டும்* சந்தை பகுதிக்குள் இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிப்பதுடன், சரக்கு வாகனங்களை இரவில் மட்டுமே அனுமதிக்க வேண்டும்* சண்முகம், அப்துல்ரசாக், முத்துரங்க முதலி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என, தாம்பரம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்புசாமி
ஜூலை 21, 2025 20:07

ரெண்டி தூண் எழுப்பினாலே போதும். அங்கே ஆக்கிரமிச்சு கடை போட்டுருவாங்க. நம்ம மக்களும் அங்கேதான் பொருள் வாங்குவாங்க. முனிசிபாலிட்டியும் அவிங்ஜ கிட்டே ரசீது போட்டு காசு வாங்கிரும். அப்புறம் காலி பண்ணச்சொல்லி பொதுநல பெட்டிசன் எவனாவது போட்டு நீதி மன்றம் பொங்கி எழுந்து காலிபண்ணச் சொல்லும். அப்புறம் எங்க வாழ்வாதாரம் போச்சுன்னு ரெண்டு பேர் தீக்குளிக்க வருவாய்ங்க. இதுலே நாமதான் வல்லரசு, அம்ரித்கால்னு ஒன்றிய அரசு வந்து ஜல்லியடிச்சிட்டுப் போகும். உள்ளூர் விடியா அரசு ஆட்டையப் போடும். ஜெய் ஹிந்த். சுபம்.வணக்கம்.


Subramanian
ஜூலை 21, 2025 06:32

Similarly a flyover on padappai - wallajah road is being constructed for a decade creating traffic chaos during morning and evening. It takes 30 minutes to one hour to cross that place during peak hour


முக்கிய வீடியோ