உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 29 ஆண்டு தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி பீஹாரில் கைது

29 ஆண்டு தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி பீஹாரில் கைது

திருவொற்றியூர், ஜூன் 28-திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகர் - பகிங்ஹாம் கால்வாயோரம், 1996 ஜூன் 7ம் தேதி நடந்த தகராறில், பீஹாரின், கயா மாவட்டத்தைச் சேர்ந்த ஜூகல் கிஷோர் சர்மா, 31, என்பவர், மல்லு ராவத் என்பவரை கல்லால் அடித்துக் கொலை செய்தார்.மறுநாளே, கொலை குற்றவாளியான ஜூகல் கிஷோர் சர்மாவை, சாத்தாங்காடு போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், 45 நாட்கள் நீதிமன்ற ஜாமின் பெற்றுள்ளார். பின், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.இந்த நிலையில், 29 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஜூகல் கிஷோர் சர்மாவை தேடி, டிச., மாதம் சிறப்பு தனிப்படை போலீசார் பீஹார் சென்றனர். இதை அறிந்தவர் போலீசாரின் கண்காணிப்பில் இருந்து, லாவகமாக தப்பி விட்டார்.பின், அந்த ஊரிலேயே, தகவல் சொல்லும் உளவாளியை வைத்து, அவர் கொடுத்த ரகசிய தகவல்படி, சாத்தாங்காடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வீராசாமி, தலைமை காவலர் ரஞ்சித், காவலர் முகமது சித்திக் ஆகிய மூன்று பேர் அடங்கிய குழுவினர் பீஹாரின், ஊலே கிராமத்திற்கு கடந்த 20ம் தேதி சென்றுள்ளனர்.அங்கு, பீஹாரின், அலிப்பூர் காவல் நிலைய போலீசாரின் உதவியுடன், தலைமறைவாக இருந்தவரை, 24ம் தேதி கைது செய்தனர்.தொடர்ந்து, கயா கூடுதல் தலைமை நீதித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று மதியம் திருவொற்றியூர், சாத்தாங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். தற்போது அவருக்கு வயது 60.விசாரணைக்கு பின், அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ