செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து கால்வாயை வெட்டி அகற்றிய மர்ம நபர்களால் பரபரப்பு
தண்டலம், சென்னையின் குடிநீர் தேவை யை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரியாக, செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் முக்கிய நீர்வரத்து கால்வாயாக கிருஷ்ணா கால்வாய் உள்ளது . ஸ்ரீபெரும்புதுார் அருகே தண்டலம் பகுதியில் உள்ள சவீதா மருத்து கல்லுாரியில் இருந்து வெளியேறும் கழிவு நீர், நேரடியாக கிருஷ்ணா கால்வாயில் விடப்படுவதால், கழிவு நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று மாசு ஏற்படுத்தியது. இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் வெளியான செய்தியை அடுத்து, நீர்வளத்துறையினர் சவீதா மருத்துவ கல்லுாரியில் இருந்து, கிருஷ்ணா கால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில் கரை அமைத்தனர். இதனால், கல்லுாரி வளாகம் மற்றும் அதன் வெளியே உள்ள காலி நிலத்தில், கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் குட்டை போல் தேங்கி நின்றது. இந்நிலையில், நேற்று மாலை தண்டலம், இருங்காட்டுக்கோட்டை சுற்றுப்புறத்தில் கன மழை பெய்தது. அப்போது, வடமாநில இளைஞர்கள் நான்கு பேர், மண்வெட்டி மூலம் கரையை வெட்டி அகற்றி, கழிவு நீரை வெளியேற்றினர். இதனால், கழிவு நீர் நேரடியாக செம்பரம்பாக்கம் ஏரியில் கலந்து, மாசு ஏற்படும் நிலை உள்ளது . கரையை வெட்டி அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; கழிவு நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் கலப்பதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திஉள்ளனர்.