இசை துறையை வளர்க்க அரும்பாடுபட்ட கேரள மஹாராஜா சுவாதி திருநாள் இயற்றிய 'ஜய ஜய பத்மநாபா' கிருதியை, முதல் பாடலாக வைத்து, தன் வாய்பாட்டு கச்சேரியை துவக்கினார் நந்தினி. தமிழ் பேசும் சபையினர் மனதை கவரும் வகையில், 'பாலகிருஷ்ண பதமலர்' என்ற பாபநாச சிவம் உருப்படியை தேர்வு செய்து வழங்கினார். பின், வேத மரபில் நிபுணத்துவம் பெற்ற அகிலாண்டேஸ்வரி அம்பாளின் சிறப்பை, பிரபலமான முத்துசுவாமி தீக் ஷிதரின் 'அகிலாண்டேஸ்வரி' எனும் த்விஜயவந்தி ராக கிருதியை, ஆலாபனையோடு ஆரம்பித்தார். மனதை சாந்தப்படுத்தும் இந்த ராகம்போலவே, சபையினரையும் சாந்தப்படுத்தினார். சஹானா வசு தேவன் வயலின் இசை உதவியோடு, அம்பாளின் கருணையை பெற்று, சபைக்கும் வழங்கினார். பின் 'ஞான மோசக ராதா' என்ற தியாகராஜரின் பூர்வி கல்யாணி படைப்பின் வாயிலாக, பக்தியை அருளினார். 'இவ்வுலகம் உன்னை வணங்குகிறது. ஆனால், என்னைத் துயரங்களின் உலகிற்குள் தள்ளாதே' என, பத்மநாபசுவாமி மீது, சுவாதி திருநாள் மஹாராஜா இயற்றிய, 'சடதம் தவக' என்ற கரகரப்பிரியா கிருதியை, முக்கிய உருப்படியாக எடுத்தாண்டார். அதற்கு, நிரவல், கற்பனை ஸ்வரங்கள், சர்வலகு ஸ்வரங்கள், குறைப்பு ஸ்வரங்கள் மற்றும் ஸ்வர கோர்வையை படபட வென வழங்கினார். சூரிய நம்பிசனின் மிருதங்கமும், விஷ்ணு காமத்தின் கஞ்சிராவும், தனி ஆவர்த்தன பகுதியில், சபையே மிரளவைக்கும் வகையில் தாளமொலிக்க செய்தனர். இறுதியாக, லால்குடி ஜெயராமனின் மாண்ட் ராக தில்லானாவை, கச்சிதமான முறையில் பாடி, ஆழ் வார்பேட்டை தத்துவ லோக சபையில், கச்சேரியை நிறைவு செய்தார். -ரா.பிரியங்கா